மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோரை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார்.
அந்த உத்தரவின் படி, துணை கமிஷனர் அரவிந்த் மேற்பார்வையில், தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது. அஅந்தத் தனிப்படை போலீசார் தல்லாகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, சொக்கிகுளம் மற்றும் வல்லபாய் மெயின் ரோட்டில் வாலிபர்கள் பத்து பேர் போக்குவரத்து விதிமுறைகளை மீறி இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்தும், அதிவேகமாக வாகனங்களை இயக்கியும் மற்றும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் செயல்களிலும் ஈடுபட்டதாக தகவல் கிடைத்தது. அந்த தகவலின் போலீசார் விரைந்து சென்று அவர்களை மடக்கிப் பிடித்தனர்.
இதையடுத்து, அவர்களிடம் இருந்த ஐந்து இருசக்கர வாகனங்கள் மற்றும் வீடியோ காமிரா உள்ளிட்டவை பறிமுதல் செய்து, வாலிபர்கள் பத்து பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.
அந்த விசாரணையில், அவர்கள் சிந்தாமணி ஆசிரியர் தெருவை சேர்ந்த மதன், கார்த்திக், தினேஷ்குமார், செல்லப்பாண்டி, உசிலம்பட்டி ஆனந்தா நகரைச் சேர்ந்த சுரேஷ், அனுப்பாண்டி, கணேஷ் நகரைச் சேர்ந்த ஹேமபிரபு, மதுரை ஆழ்வார்புரம் வைகை வடகரையைச் சேர்ந்த முகம்மது இம்ரான், நாகூர் முகமது ஆசிக், மாத்மா காந்தி நகரைச் சேர்ந்த லோகேஸ்வரன் மற்றும் கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்த ரமணா என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.