கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆற்றில் மூழ்கி செங்கல் சூளை உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மாராயபுரம் பகுதியை சேர்ந்தவர் டேவிட் (40). இவர் சொந்தமாக செங்கல் சூளை நடத்தி வந்தார். இந்நிலையில் வழக்கமாக டேவிட் வேலை முடிந்ததும் அப்பகுதியில் உள்ள ஆற்றில் குளித்துவிட்டு வீட்டிற்கு செல்வார். இதையடுத்து நேற்று முன்தினமும் டேவிட் ஆற்றில் குளிக்க சென்றுள்ளார்.
ஆனால் ஆற்றில் குளிக்கச் சென்ற டேவிட் வெகு நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் டேவிட்டை தேடி ஆற்றங்கரைக்கு சென்றுள்ளனர். அப்பொழுது ஆற்றுக் கரையில் டேவிட் குளிப்பதற்காக வைத்திருந்த துண்டு மற்றும் சோப்பு உள்ளிட்ட அவரது பொருட்கள் இருந்துள்ளது.
இதையடுத்து டேவிட் ஆற்றில் மூழ்கி இருக்கலாம் என்று சந்தேகமடைந்து, இது குறித்து தீயணைப்பு துறையினருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், நேற்று முன்தின இரவு முதல் நேற்று இரவு வரை தீவிரமாக தேடி வந்தனர்.
ஆனால் டேவிட் உடல் கிடைக்காத நிலையில், இன்று காலையும் தேடுதல் பணியில் ஈடுபட்டு, டேவிட்டின் உடலை கைப்பற்றினர். பின்பு போலீசார் டேவிட் உடலை பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.