நிதின் கட்காரிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் பற்றி தீவிர விசாரணை

பெங்களூரு:-

மத்திய மந்திரி நிதின் கட்காரி

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபையில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரியாக இருந்து வருபவர் நிதின் கட்காரி. இவரது அலுவலகம் மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ளது. இந்த நிலையில் அவரது அலுவலகத்தில் உள்ள தொலைபேசிக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஒரு மர்ம நபர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.

அந்த மர்ம நபர், தான் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் கும்பலைச் சேர்ந்தவன் என்று கூறி தன்னை அறிமுகம் செய்து கொண்டார். பின்னர் அவர் மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு கொலை மிரட்டல் விடுத்து, ரூ.100 கோடி தருமாறு கேட்டார். இதனால் பதற்றம் அடைந்த அலுவலக ஊழியர்கள், உடனடியாக மத்திய மந்திரி நிதின் கட்காரி, அவரது பாதுகாவலர்கள், போலீசார் என அனைவருக்கும் தகவல் தெரிவித்தனர்.

கொலை மிரட்டல்

அதன்பேரில் உஷாரான மத்திய உள்துறை போலீசார், சைபர் கிரைம் மூலம் அந்த செல்போன் அழைப்பு எங்கிருந்து வந்தது என்று கண்டுபிடித்தனர். அப்போது அந்த அழைப்பு கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் இண்டல்கா சிறையில் இருந்து வந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து மத்திய உள்துறை அதிகாரிகள், கர்நாடக உள்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். அவர்கள் மூலம் இந்த தகவல் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு சென்றது.

பின்னர் உடனடியாக போலீசார் இண்டல்கா சிறையில் சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் நிதின் கட்காரிக்கு கொலை மிரட்டல் விடுத்து, ரூ.100 கோடி கேட்டது ஜெயேஷ் பூஜாரி என்பது தெரியவந்தது.

மரண தண்டனை

மேலும் அவர் ஒரு கொலை வழக்கு தொடர்பாக கோர்ட்டால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. இண்டல்கா சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவர் கடந்த 2016-ம் ஆண்டு சிறையில் இருந்து தப்பி உள்ளார். பின்னர் அவரை மீண்டும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். விரைவில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அனைத்து கோணங்களிலும் விசாரணை

மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு இண்டல்கா சிறையில் இருந்து ஜெயேஷ் பூஜாரி என்பவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த கர்நாடக அரசு சார்பில் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுபற்றி அனைத்து கோணங்களில் விசாரித்து தகவல்களை பெற்று வருகிறோம். இதை மிக தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளோம். கொலை மிரட்டல் விடுத்த ஜெயேஷ் பூஜாரி பற்றியும், அவரது பின்புலம் குறித்தும் தீவிரமாக விசாரிக்க உத்தரவிட்டு இருக்கிறேன்.

ஜெயேஷ் பூஜாரி, ஒரு கொலை வழக்கில் கோர்ட்டால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. விசாரணை முடிவில் இச்சம்பவம் குறித்த உண்மை தகவல்கள் தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.