சென்னை: காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை உட்பட தமிழகம் முழுவதிலும் சுற்றுலா தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
போகி, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கலை தொடர்ந்து காணும் பொங்கல் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மக்கள் குடும்பம் குடும்பமாக சுற்றுலா தலங்களுக்கு வருவார்கள் என்பதால், தமிழகத்தின் அனைத்து முக்கிய சுற்றுலா தலங்கள், கடற்கரைகள், பூங்காக்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்கா மற்றும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, வடபழனி முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் சுமார் 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு, கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 1,000 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். மக்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை, திருச்சி மலைக்கோட்டை, காஞ்சி காமாட்சி அம்மன், மதுரை மீனாட்சி அம்மன், திருப்பரங்குன்றம், பழநி, திருச்செந்தூர், திருத்தணி உள்ளிட்ட அறுபடை வீடு ஆலயங்கள், வேலூர் ஜலகண்டேஸ்வர் கோயில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், மாமல்லபுரம் கடற்கரை கோயில், வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலயம், ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட தலங்களில் மக்களின் பாதுகாப்பு மற்றும் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஆயிரக்கணக்கான போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து விதிகளை மீறுவோர், போதையில் வாகனம் ஓட்டுபவர்களை கட்டுப்படுத்த முக்கிய பகுதிகளில் வாகன தணிக்கையும் நடந்து வருகிறது.வணிக வளாகங்கள், திரையரங்குகள் அமைந்துள்ள பகுதிகளிலும் போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.