மதுரை: மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடந்தது. இதில் அதிகபட்சமாக 23 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த அலங்காநல்லூர் சின்னப்பட்டியை சேர்ந்த தமிழரசனுக்கு முதல்வர் ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது. 9 காளைகளை அடக்கிய வீரர் ஒருவர், காளை முட்டியதில் உயிரிழந்தார். காவல் ஆய்வாளர் உட்பட 36 பேர் காயமடைந்தனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி அவனியாபுரத்தில் நேற்று முன்தினம் நடந்தது. 2-வதாக பாலமேட்டில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியை மஞ்சள்மலை ஆற்று மைதானத் திடலில் வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
போட்டி தொடங்குவதற்கு முன்புமாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். வாடிவாசலில் முதலில் கிராமக் கோயில்களுக்கு சொந்தமான காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அதன்பிறகு, டோக்கன் அடிப்படையில் ஒன்றன்பின் ஒன்றாக சுற்றுக்கு 100 காளைகள் வீதம் அவிழ்த்துவிடப்பட்டன. காளைகள் சீறிப் பாய, மாடுபிடி வீரர்கள் அவற்றின் திமில்களைப் பிடித்து அடக்கினர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும் தங்கக் காசுடன் சிறப்பு பரிசுகளாக லேப்டாப், குக்கர், எல்இடி டிவி, ஃப்ரிட்ஜ், தங்கக் காசு, கட்டில், மெத்தை, சைக்கிள், பீரோ, அண்டா என ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன.
காளைகளை அடக்க ஒவ்வொரு சுற்றிலும் 25 வீரர்கள் களமிறக்கப்பட்டனர். இதில், 9 காளைகளை அடக்கி பாலமேட்டை சேர்ந்த அரவிந்த் ராஜன் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தார். 5-வது சுற்றுக்கு தகுதிபெற்ற இவர், சிறந்த மாடுபிடி வீரர் என்ற பரிசை தட்டிச்செல்லும் முனைப்புடன் காளைகளை அடக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு காளை அவரை வயிற்றில் முட்டித் தள்ளியது. இதில் படுகாயமடைந்த அவரை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்குசிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
9 சுற்றுகளாக நடந்த போட்டியில் மொத்தம் 860 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. இதில், அலங்காநல்லூர் சின்னப்பட்டியை சேர்ந்த தமிழரசன் அதிகபட்சமாக 23 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். இவருக்கு முதல்வர் ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது. 19 காளைகளை அடக்கி 2-ம் இடம் பிடித்த பாலமேடு போஸ் மணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் பைக் பரிசாக வழங்கப்பட்டது.
சிறந்த காளையாக தேர்வான ரெங்கராஜபுரம் மணிகார்த்திக்கின் காளைக்கு பைக்கும், 2-ம் இடத்துக்கு தேர்வான திண்டுக்கல் ரமேஷின் காளைக்கு நாட்டு இனக் கன்றுடன் கூடிய பசுவும் பரிசாக வழங்கப்பட்டன. இப்போட்டியில் காவல் ஆய்வாளர், கிராம உதவியாளர், வீரர்கள் உட்பட 36 பேர் காயமடைந்தனர்.
ஜல்லிக்கட்டு நிகழ்வில் மதுரை ஆட்சியர் அனீஸ் சேகர், மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜீத் சிங்காலோன், எம்எல்ஏக்கள் வெங்கடேசன், பூமிநாதன் மற்றும் ஜல்லிக்கட்டு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் மேற்பார்வையில் உளவுத் துறை ஐ.ஜி. செந்தில்வேலன், டிஐஜி பொன்னி, எஸ்.பி.க்கள் சிவபிரசாத் (மதுரை), பாஸ்கரன் (திண்டுக்கல்), டோங்ரே பிரவின் உமேஷ் (தேனி) ஆகியோர் தலைமையில் 1,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
முதல்வர் ரூ.3 லட்சம் நிவாரணம்
இதற்கிடையே, திருச்சி மாவட்டம் பெரிய சூரியூரில் நேற்று நடந்தஜ ல்லிக்கட்டில் 623 காளைகள், 315 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இதில், காளை முட்டியதில்,பார்வையாளராக பங்கேற்ற புதுக்கோட்டை மாவட்டம் கண்ணக்கோன்பட்டியை சேர்ந்த பொக்லைன் ஓட்டுநர் அரவிந்த் (25) உயிரிழந்தார். இதையடுத்து, பாலமேடு,சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கும் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடக்கிறது. இதை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதில் 1,000 காளைகள், 300 வீரர்கள் பங்கேற்கின்றனர். இதில் அனைத்து காளைகளுக்கும் தங்கக்காசு பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.