சென்னை தாம்பரத்தில் இருக்கும் சானிடோரியம் மெப்ஸ் ஏற்றுமதி வளாகத்தில் பல தனியார் நிறுவனங்கள் இயங்கிவருகிறது. இந்த நிறுவனத்தில் பல வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகிறார்கள். அப்படி, இந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் திருநீர்மலை சாலையில் உள்ள ஒரு பெண்கள் விடுதியில் தங்கியுள்ளனர்.
இந்த விடுதி அமைத்துள்ள இடத்துக்கு மிக அருகிலேயே துணை மின் நிலையத்துக்குச் செல்லும் உயர் அழுத்த மின்சார கேபிள் செல்கிறது. இந்த கட்டடத்தின் பராமரிப்பு பணிகள் நடைபெற்றுவருவதால் ஜன்னல் கிரில் கம்பிகளைக் கழட்டி வைத்துவிட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்நிலையில், இந்த விடுதியில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கும்கும் குமாரி என்ற 19 வயது பெண் தங்கியுள்ளார்.
நேற்று காலை அவர் தனது செல்போனில் சார்ஜ் இல்லாததால் தனது பவர் பேங்கில் ஜார்ஜ் போட்டுக்கொண்டு செல்போனில் பேசிக்கொண்டிருக்கிறார். அவர், உயர் அழுத்த மின்சார கேபிள் அருகில் நின்று பேசிக்கொண்டிருக்கும்போது, அங்குக் காயப்போட்டிருந்த துணி கீழே விழுந்திருக்கிறது. அதனை ஒரு பிளாஸ்டிக் சேர் போட்டு எடுக்க முயற்சி செய்திருக்கிறார்.
அப்போது, உயர் அழுத்த மின்சார கேபிளிலிருந்து கும்கும் குமாரி மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. கண்ணிமைக்கும் நொடிப்பொழுதில், மின்சாரம் தாக்கியதில் படுகாயம் அடைந்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு பலரும் வெளியே வந்து பார்த்திருக்கின்றனர்.
அப்போது அந்த கட்டடம் முழுவதும் மின்சாரம் பாய்ந்ததால் விடுதியிலிருந்து ஊர்மிளா குமாரி, பூனம் என்ற இரண்டு பெண்கள் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. சம்பவமறிந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் தற்காலிகமான மின் சேவையைத் துண்டித்துள்ளனர். பலத்த காயம் ஏற்பட்ட கும்கும் குமாரி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், இருவர் தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவருகிறார்கள். மேலும், அந்த விடுதி, அனுமதி பெற்று நடைபெற்று வருகிறதா என்றும் கட்டட உரிமையாளரிடமும், விடுதி மேற்பார்வையாளரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.