திமுகவுக்கு திரும்புகிறாரா மு.க. அழகிரி… உதயநிதி சந்திப்புக்கு பின் தகவல்

MK Alagiri Udhayanidhi Meetup: மதுரை அலங்காநல்லூரில் தைத்திருநாளை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு போட்டி வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை தொடக்கிவைக்க தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று விமானம் வழியாக மதுரை வந்தடைந்தார்.

தொடர்ந்து அழகர்கோவில் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பின்னர் டிவிஎஸ் நகரில் உள்ள தனது பெரியப்பாவான முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை நேரில் சந்தித்தார். 

வீட்டிற்குள் நுழையும் முன்பே அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை மு.க. அழகிரி வரவேற்றார். அப்போது, உதயநிதி ஸ்டாலினும் அழகிரியின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.  தொடர்ந்து அழகிரியின் மனைவி காந்தியும், உதயநிதிக்கு நெற்றியில் முத்தமிட்டு வரவேற்றார். உதயநிதி ஸ்டாலின் மற்றும் அழகரி இருவரும் மாறி மாறி பொன்னாடை போர்த்திக்கொண்டனர்.

இந்த சந்திப்பின் போது, தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்எல்ஏ தளபதி உள்ளிட்டோர் உடனிருந்தனர். வீட்டிற்குள் சென்று உறவினர்களை சந்தித்த பின் வெளியே வந்து அமைச்சர் உதயநிதி செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர்,”அமைச்சராக பதவியேற்ற பின் எனது பெரியப்பாவை சந்தித்து வாழ்த்து பெற வந்தேன். எனது பெரியப்பாவும் பெரியம்மாவும் என்னை ஆசிர்வதித்தனர். இருவரும் மனநிறைவோடு வாழ்த்தினர்” என்றார்.

தொடர்ந்து பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி,”தம்பி மகன் என்ற முறையில் எங்களிடம் ஆசி பெற வந்திருந்தார். அமைச்சர் அன்பில் மகேஷும் எனக்கு இன்னொரு மகன்தான். அவருக்கும் ஆசி வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளேன். 

நான் திருநகரில் உள்ள வீட்டில் இருந்தபோது என் குழந்தைகளுடன் விளையாடியவர்கள் இன்று அமைச்சர்களாக உள்ளார்கள் என்பது எல்லை இல்லா மகிழ்ச்சியாக உள்ளது. அதைவிட சந்தோஷம் எனது தம்பி முதல்வராக உள்ளார், மகன் அமைச்சராகி உள்ளார்” என்றார். தொடர்ந்து, திமுகவில் இணைவது குறித்த கேள்விக்கு, அதை அவர்கள் ( தலைமை ) தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்தார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.