புதுடெல்லி: உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்வதற்கு கொலீஜியம் பரிந்துரை எனும் முறை பயன்பாட்டில் உள்ளது. கொலீஜியம் என்பது நீதிபதிகள் குழு இடம்பெற்றுள்ள ஒரு தன்னிச்சையான அமைப்பாகும்.
இந்த கொலீஜியத்தின் மூலம் புதிய நீதிபதிகள் தேர்வு, இடமாற்றம் போன்ற பரிந்துரைகள் மத்திய அரசுக்கு அனுப்பப்படும். கொலீஜியத்தின் பரிந்துரை அடிப்படையில் மத்திய சட்டத் துறை அமைச்சகம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று அறிவிப்பை வெளியிடும். கொலீஜியத்தின் பரிந்துரைகளை நிராகரிக்கும் உரிமையும் மத்திய அரசுக்கு உண்டு.
இந்நிலையில், கொலீஜியம் மூலம் சரியாக நீதிபதிகள் தேர்வு செய்யப்படவில்லை எனவும் கொலீஜியம் முறையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனை எதிர்த்து தேசிய நீதிபதிகள் ஆணையத்தை மத்திய அரசு கடந்த 2015-ல் கொண்டு வந்தது. அதனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
மேலும் கொலீஜியம் முறைக்கு மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட்டுக்கு அமைச்சர் கிரண் ரிஜிஜு எழுதியுள்ள கடிதத்தில் கூறும்போது, ‘‘உச்ச நீதிமன்ற கொலீஜியத்தில் மத்திய அரசுப் பிரதிநிதிகளும், உயர் நீதிமன்ற கொலீஜியத்தில் மாநில அரசுப் பிரதிநிதிகளும் இடம்பெற வேண்டும். நீதிபதிகளின் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்றால் கொலீஜியத்தில் அரசுப் பிரதிநிதிகள் இடம்பெறுவது அவசியம். எனவே, அதற்கான பணிகளை உச்ச நீதிமன்றம் செய்யவேண்டும்’’ என்று வலியுறுத்தி உள்ளார்.