திருக்கணித பஞ்சாங்கத்தின்படி இன்று மாலை சனிப்பெயர்ச்சி நடைபெறும் என்பதால் உலகப்புகழ் பெற்ற திருள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாற்றில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் ஆலயம் உள்ளது. சனிக்கு பரிகார தலமாக விளங்கும் இங்கு, தனி சன்னதி கொண்டுள்ள சனீஸ்வர பகவாம் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.
இந்த நிலையில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும். கடந்த 2020 ஆம் ஆண்டு சனிப்பெயர்ச்சி விழாவின்போது சனிபகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு இடம் பெயர்ந்தார். இதையடுத்து இந்தாண்டு திருக்கணித பஞ்சாங்கத்தின் படி சனிப்பெயர்ச்சி இன்று மாலை 6.04 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆவதாக சில ஜோதிடர்கள் கணித்துள்ளார்கள்.
இதனிடையே திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் வாக்கிய பஞ்சாங்கப்படித்தான் கோவிலில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. அதன்படி வரும் டிசம்பர் மாதம் இறுதியில் தான் சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும் என்றும் அதன் நாள் நேரம் பின்னர் தெரிவிக்கப்படும் என கோயில் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்நிலையில் திருக்கணித பஞ்சாங்கத்தை நம்பும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் இன்று சனிப்பெயர்சி நடைபெறும் என்று எண்ணி பல்வேறு மாநிலத்தில் இருந்து வந்து குவிந்துள்ளனர்.
இருப்பினும் இந்த ஆலயத்தை பொறுத்தவரை 5 கால பூஜையை தவிர, சனிப்பெயர்ச்சிக்காக சிறப்பு பூஜைகள் இன்று நடைபெறாது என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் எப்போதும் இந்த கோயிலுக்கு வந்தாலும் சனீஸ்வரரின் பலன் கிடைக்கும் பரிகாரத்தலமாக திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில் அமைந்துள்ளது. அந்த வகையில் இன்று கோயிலுக்குள் ஏராளமான வெளி மாநில பக்தர்கள் வந்துள்ளதால் புதுச்சேரியில் இருந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM