பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் சமீபத்தில் டெல்லியைச் சேர்ந்த அடில் கான் துரானி என்பவரைத் திருமணம் செய்து கொண்டதாக அறிவித்தார். ஆனால் அத்திருமணத்தை அடில் வெளிப்படையாக அறிவிக்காமல் தாமதப்படுத்தி வருவதாகத் தெரிவித்திருந்தார்.
நீண்ட இழுபறிக்குப் பிறகு நேற்று ராக்கி சாவந்த்துடனான தனது திருமணத்தை அடில் முறைப்படி அறிவித்தார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்து குறிப்பிட்டிருந்தார். அந்தப் பதிவில், “ராக்கியுடனான திருமணத்தை மறைக்கவில்லை. திருமணத்தை அறிவிப்பதில் தாமதம் செய்யவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது” என்று தெரிவித்தார்.
இது குறித்து இருவரும் முறைப்படி பத்திரிக்கையாளர்களையும் சந்தித்தனர். ராக்கி சாவந்த் அளித்த பேட்டியில், “எனது சகோதரர் பாய் (சல்மான்கான்) என் கணவர் அடில் கான் துரானியை சந்தித்துப் பேசினார். எனது பாய் என் கணவர் மீது மிகவும் அன்பு செலுத்துகிறார். பாய் எனது கணவருக்கு நிச்சயம் போன் செய்திருக்கவேண்டும். என் சகோதரன் சல்மான் கானின் சகோதரியான என் திருமணத்தை மறுக்க முடியுமா? சல்மான் கானை சந்தித்த பிறகுதான் ஏதோ நடந்திருக்கவேண்டும். சல்மான் கான் தான் எனது திருமணத்தை காப்பாற்றிக்கொடுத்தார்” என்று தெரிவித்தார்.
ராக்கி சாவந்த்துடன் இருந்த அவரின் கணவர் அடில் கான் இது குறித்துக் கூறுகையில், “சல்மான் கான் மிகவும் மென்மையானவர். அவர் என்னிடம் சிலவற்றைத் தெரிவித்தார். அவற்றை நான் ஏற்றுக்கொண்டேன். மற்றபடி வேறு எதுவும் இல்லை” என்று தெரிவித்தார். இருவரும் சேர்ந்து இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.