சபரிமலை சன்னதியில் மேளதாளம் முழங்க இரண்டாம் நாளாக நடைபெற்ற படி பூஜை

சபரிமலை சன்னதியில் பிரசித்தி பெற்ற படி பூஜை, மேள தாளம் முழங்க இரண்டாவது நாளாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காலத்தில் தினசரி 90 ஆயிரம் பக்தர்கள் வீதம் இதுவரை 44 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பால் படி பூஜை நடத்த முடியாத நிலையில், மகர ஜோதி தரிசனத்திற்குப் பின் பக்தர்களின் தரிசன எண்ணிக்கை சற்றே குறைந்தது. இதையடுத்து, இந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தின் முதல் ‘படி பூஜை’ கடந்த ஞாயிற்றுக்கிழமை மேளதாளம் முழங்க நடைபெற்றது.
image
இந்நிலையில், இரண்டாம் நாளாக திங்கட்கிழமையும் படி பூஜை நடைபெற்றது. படி பூஜைக்காக சபரிமலை 18 ஆம் படி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஒவ்வொரு படியிலும் கற்பூர தீபம் ஏற்றப்பட்டது. 18 தேவதைகளையும் ஒவ்வொரு படியிலும் அமர்த்தி நடத்தும் படி பூஜையில் பங்கேற்போருக்கு சகல ஐஸ்வர்யங்களும், சர்வ பாக்கியங்களும், எல்லா நலன்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி அடங்கிய குழுவினர் இரண்டாம் நாள் படி பூஜையை நடத்தினர். திரளான பக்தர்கள் படி பூஜையில் பங்கேற்று தரிசனம் செய்தனர். ஒருவருக்கு ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 900 ரூபாய் கட்டணமுள்ள இந்த படி பூஜை, சபரிமலை பூஜைகளிலேயே அதிக கட்டணமுள்ள பூஜை ஆகும். படி பூஜையின் முன்பதிவு வரும் 2037 ஆம் ஆண்டு வரை முடிந்துள்ளது.
image
இதைத் தொடர்ந்து படி பூஜைக்காக இன்று முன்பதிவு செய்யும் ஐயப்ப பக்தர்கள், இனி 14 ஆண்டுகளுக்குப் பிறகே படி பூஜையில் பங்கேற்று தரிசனம் செய்ய முடியும்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.