திருமங்கலம் கோபாலபுரம் முனியாண்டி கோயிலில் அசைவ அன்னதான விழா: ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு கறி விருந்து

திருமங்கலம்: திருமங்கலம் அருகேயுள்ள கோபாலபுரம் முனியாண்டி கோயில் அசைவ அன்னதான திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். மதுரைமாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள எஸ்.கோபாலபுரம் கிராமத்தில் புகழ்பெற்ற முனியாண்டி சாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொருஆண்டும் மாட்டுபொங்கல் அன்று பொங்கல் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு பொங்கல் விழாவையொட்டி கடந்த 10ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று கோபாலபுரம் கோயிலில் 60வது ஆண்டு பொங்கல் திருவிழா நடைபெற்றது.

முனியாண்டி விலாஸ் ஓட்டல் நடத்தும் உரிமையாளர்கள் தங்களது உணவகங்களை இரண்டு நாள்களுக்கு மூடிவிட்டு இந்த திருவிழாவில் கலந்து கொண்டனர். பக்தர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு கோபாலபுரம் கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக மேளதாளங்கள் முழங்க வந்து முனியாண்டி சாமிக்கு குடம்குடமாக பாலாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மதியம் 1 மணியளவில் முதலில் சக்திகிடாய் வெட்டப்பட்டது. தொடர்ந்து 100 ஆடுகள்வெட்டப்பட்டு 50க்கும் மேற்பட்ட கோழிகள் அறுக்கப்பட்டு அசைவ அன்னதானம் நடைபெற்றது. இதில் புதுப்பட்டி, செங்கபடை, டி.கல்லுப்படடி, திருமங்கலம், பேரையூர், கள்ளிக்குடி பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மாலை 5 மணியளவில் பட்டாசுகள் முழங்க நிலைமாலையுடன் கூடிய மலர்தட்டு ஊர்வலம் கிளம்பியது. கோபாலபுரம் பெரியதெருவில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலர்மாலை, தேங்காய், பழங்கள் அடங்கிய மலர்தட்டுகளை தலையில் வைத்து ஊர்வலமாக வந்தனர்.இது குறித்து கோயில் நிர்வாகிகளில் ஒருவரான ராமமூர்த்தி கூறுகையில், ‘‘முனியாண்டி சாமி பெயரில் ஓட்டல்கள் நடத்தி வருகிறோம். ஒவ்வொரு மாட்டுபொங்கல் அன்று கிராமத்தில் உறவினர்கள் ஒன்றுசேர்ந்து பொங்கல் விழாவைகொண்டாடுவோம். இதில் மலேசியா, சிங்கபூர், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளை ஓட்டல் நடத்துபவர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொள்வோம்.  திருவிழாவை காணவரும் பக்தர்களுக்கு அசைவ அன்னதானம் வழங்குவது இங்கு சிறப்பு அம்சமாகும்’’என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.