அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: இந்தப் பொங்கலுக்கு அப்படியென்ன ஸ்பெஷல்!

பொங்கல் பண்டிகை என்றாலே தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை தவிர்க்க இயலாது. அதிலும் மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் புகழ்பெற்றது. நடப்பாண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டிகளை விளையாட்டுத் துறை அமைச்சர்
உதயநிதி ஸ்டாலின்
இன்று காலை 8 மணிக்கு கொடியசைத்து தொடங்கி வைத்தார். வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டு போட்டியில் பங்கேற்றனர். முதலில் கோயில் காளைகள் வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்டன.

அலங்காநல்லூர் சிறப்பு

கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பின்னர் நடக்கும் ஜல்லிக்கட்டு என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. அதற்கேற்ப பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தப் போட்டியில் 1,000 காளைகள், 350 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு சுற்றிலும் தலா 25 முதல் 40 வீரர்கள் அனுமதிக்கப்பட்டு 10 சுற்றுகளாக போட்டி நடைபெறுகிறது. போட்டியில் சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் காளைகளுக்கு தலா ஒரு கார் பரிசு வழங்கப்படவுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டிகள்

முதல் இடத்தை பிடிக்கும் சிறந்த மாடுபிடி வீரருக்கு முதலமைச்சர் சார்பிலும், சிறந்த காளைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெயரில் கார் பரிசாக வழங்கப்படவுள்ளது. போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கும் அமைச்சர் மூர்த்தி சார்பில் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. சிறப்பாக விளையாடக் கூடிய காளைகள் மாடுபிடி வீரர்களுக்கு பைக், ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், மிக்சி போன்ற பல்வேறு பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.

தடபுடல் ஏற்பாடுகள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி முழுவதும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. ஆன்லைன் மூலமாக பதிவு செய்யப்பட்ட காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆள் மாறாட்டத்தை தடுக்கும் வகையில் வீரர்களை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

கறாரான நடவடிக்கை

போலியான ஆவணங்களை பயன்படுத்தி காளை உரிமையாளரோ, மாடுபிடி வீரர்களோ கலந்து கொண்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்படும். காளைகளை கண்காணிக்க விலங்குகள் நல வாரியம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை ஆகியோர் இணைந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

தயார் நிலையில் மருத்துவக் குழு

பாதுகாப்பு பணிக்காக 2,000 காவல்துறையினர் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். இந்த போட்டியை காண வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். அவர்களுக்கு தனி பார்வையாளர் மாடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டியின் போது சிகிச்சைக்காக 160 மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய மருத்துவக் குழு, 60 கால்நடை மருத்துவர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு வாகனங்கள்

தீயணைப்பு நிலைய வாகனங்கள், 108 ஆம்புலன்ஸ்கள், காளைகளுக்கான ஆம்புலன்ஸ், நடமாடும் மருத்துவமனை வாகனங்கள் ஆகியவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை ஒட்டி பேரூராட்சி சார்பில் குடிநீர், கழிப்பிடம் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.