சென்னை: ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜ் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
பொங்கல் விழாவை முன்னிட்டு நடத்தப்படும் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று (ஜன.17) காலை தொடங்கியது. தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார்.
இதன்பிறகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்,”தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் என்ற முறையில் துவங்கி வைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் சிறப்பாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜ் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவது குறித்து முதல்வர் அறிவிப்பார். அவசர வேலை வந்ததால் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் இருந்து கிளம்பிச் செல்கிறேன்.” இவ்வாறு அவர் கூறினார்.