மத்திய குடிமைப்பணி (பென்ஷன்) விதிகள் 1972-ன்படி வழங்கப்பட்டு வரும் பழைய (Defined Benefit) பென்ஷன், மத்திய அரசின் ஆயுதப்படையினர் அனைவருக்கும் பொருந்தும். எனவே, இதற்கான ஆணையை மத்திய அரசு பிறப்பிக்க வேண்டும் என்று கடந்த 12.01.2023 அன்று தீர்ப்பளித்துள்ளது டெல்லி உயர்நீதிமன்றம். இதற்காக மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் அளித்துள்ள கால அவகாசம் `எட்டு வாரங்கள்’ மட்டுமே!
மத்திய ஆயுதப்படையினர்…
மத்திய குடிமைப்பணி (பென்ஷன்) விதிகள் 1972-ன்படி வழங்கப்பட்டு வரும் பழைய (Defined Bebefit) பென்ஷன், மத்திய அரசின் ஆயுதப்படையினர் அனைவருக்கும் பொருந்தும். எனவே, இதற்கான ஆணையை மத்திய அரசு பிறப்பிக்க வேண்டும் என்று கடந்த 12.01.2023 அன்று தீர்ப்பளித்துள்ளது டெல்லி உயர்நீதிமன்றம். இதற்காக மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் அளித்துள்ள கால அவகாசம் ‘எட்டு வாரங்கள்’ மட்டுமே!
மத்திய ஆயுதப்படை (Central Armed Police Force-CAPF) என்பதில் கீழ்க்காணும் ஏழு வகைப படையினர் அடங்குவர்.
1. அஸ்ஸாம் ரைஃபில்ஸ் (Assam Riffles – AR)
2. எல்லை பாதுகாப்புப் படையினர் (Border Security Force – BSF)
3. மத்திய தொழிலாக பாதுகாப்புப் படையினர் (Central Industrial Security Force – CISF)
4. மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (Central Armed Police Force – (RPF)
5. இந்தோ – திபேத்திய எல்லைப் படையினர் (Indo Tibetan Border Force – ITBF)
6. தேசிய பாதுகாப்புப் படையினர் (National Security Guard – NSG)
7. சக்ஸ்ட்ரா ஸீமா பால் (Sahastra seema Bal – SSB)
82 மனுக்கள் கொண்ட ஒரு வழக்குக் கோவை (set of petitions) மீது நீதியரசர்கள் சுரேஷ்குமார் மற்றும் நீதியரசர் நீனா பன்சால் கிருஷ்ணா ஆகிய இருவர் கொண்ட அமர்வு 12712/2021 வழக்கின் மீது மேற்கண்ட தீர்ப்பை தற்போது வழங்கியுள்ளது.
பழைய பென்ஷன் யாருக்கு?
மத்திய அரசின் நிதியமைச்சகம் (பொருளாதார விவகாரங்களுக்கான துறை) கடந்த 22.12.2023 அன்று புதிய (NPS) பென்ஷன் பற்றிய ஆணையை வெளியிட்டது. அதன் முதல் பத்தியில் கீழ்க்கண்ட வாசகம் உள்ளது.
01.01.2004-க்குப் பிறகு முதல் நிலையில் ராணுவப் படையினர் தவிர்த்து, மத்திய அரசுப் பணிக்கு வரும் புதிய ஊழியர் அனைவருக்கும் “நேஷனல் பென்ஷன் சிஸ்டம்” கட்டாயம் என்பதாக உள்ளது. இதன்படி ராணுவப் படையினர் மட்டும் பழைய பென்ஷன் பெறத் தகுதி உள்ளவர்களாக இருக்கின்றனர்.
யாரெல்லாம் ராணுவப் படையினர்?
‘1981-ல் மிஷோரம் யூனியன் பிரதேசத்துக்கு எதிராக அகிலேஷ் பிரசாத் என்பவர் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் சி.ஆர்.பி.எஃப். (மத்திய ரிசர்வ் போலீஸ் படை) என்பது ராணுவப்படையினரின் ஒரு பகுதி என்பது தெளிவாக உள்ளது’
மத்திய அரசின் உள்துறை 06.08.2004 அன்று வெளியிட்ட தெளிவுரை, 17.12.2020 அன்று வெளியிட்ட மெமோரண்டம் ஆகியவற்றின் படி பி.எஸ்.எஃப். – சி.ஐ.எஸ்.எஃப். – சி.ஆர்.பி.எஃப் – ஐ.டி.பி.பி – என்.எஸ்.ஜி – ஏ.ஆர் – எஸ்.எஸ்.பி. முதலானவையும் மத்திய அரசின் உள்துறையின் கட்டுபாட்டின் கீழ் உள்ள மத்திய படையின் ஒரு பகுதி தான் என்பதால், மேற்கண்ட ஆயுதப்படையினருக்கு பழைய பென்ஷனை மறுக்கக் கூடாது என தீர்ப்பு வழங்கியுள்ளது.
அழுத்தமான ஆதாரம்
இதற்கெல்லாம் மேலாக இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 246-வது (article ) விதியுடன் VIIவது அட்டவணையின் லிஸ்ட் 1 மற்றும் பதிவு 2 -டன் இணைத்துப் பார்த்தால், இந்திய யூனியனின் ராணுவப்படை (Armed Forces) என்பது, கடற்படை – ராணுவம் (Military) விமானப்படையுடன் வேறு வகை ஆயுதப்படையும் சேர்ந்தது’ என்பதாக உள்ளது என்ற ஆதாரத்தை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது உயர்நீதிமன்றம்.
மேல்முறையீடு
இந்தத் தீர்ப்பின் மீது மேல் முறையீடு செய்யப்படலாம்… அதன் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது இப்போதைக்கு கணிக்க முடியாத ஒன்று. என்றாலும், தற்போதைய தீர்ப்பு அமலாக்கம் பெறும் பட்சத்தில் சுமார் 10,06,745 ஆயுதப்படையினரில் முன்னதாக பழைய பென்ஷன் பெற்று வருவோர் போக நிகர எண்ணிக்கையினர் பழைய பென்ஷன் பெறத் தகுதி பெறக்கூடும். பழைய பென்ஷன் பெறுவோரை விட புதிய பென்ஷன் பெற்று வரும் இவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கக்கூடும்.
என்.பி.எஸ் முதலீடு
‘நாங்கள் மீண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தப் போகிறோம். எனவே, எங்களது ஊழியர்கள் கணக்கில் சேர்ந்துள்ள என்.பி.எஸ். முதலீட்டுத் தொகையை திருப்பித்தாருங்கள்” என்று விண்ணப்பித்திருந்த ராஜஸ்தான், சட்டீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களுக்கு, “ என்.பி.எஸ் முதலீட்டை ஊழியர் ஓய்வு பெறுவதற்குமுன் தருவதற்கு விதியில் இடம் இல்லை “ என்று ஓய்வூதிய நிதி ஒழுங்கு மற்றும் மேம்பாட்டு ஆணையம் மறுத்துள்ள நிலையில், ஆயுதப்படையினருக்கு பழைய பென்ஷன் அமலாக்கம் பெறும்பட்சத்தில், அவர்களது என்.பி.எஸ் முதலீடு எவ்வாறு செட்டில்மெண்ட் (Settlement) செய்யப்படும் என்பதும் பொறுத்திருந்து பார்க்க வேண்டிய ஒன்று.
இரட்டை செலவு
இப்போதைய நிலையில் மத்திய அரசும் சரி, மாநில அரசுகளும் சரி, பங்களிப்பு பென்ஷன் அமலாக்கம் பெற்ற பிறகு இரண்டு வகை செலவுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதாவது, பழைய பென்ஷன்தாரர் ஓய்வு பெற்றால் அவர்களுக்கு மாதாந்தர பென்ஷனுடன், பணியில் உள்ள பங்களிப்பு பென்ஷன்தாரர்களுக்கும் அரசுத் தரப்பு பங்களிப்பையும் செலுத்தி வருவதால் அரசின் செலவு இரண்டு வகையாய் உள்ளது. முன்னெப்போதையும் விட அதிகரித்துள்ளது. அதாவது, என்.பி.எஸ்–ன் கீழ் 100 பேருக்கு தரப்படும் மாதாந்திர 14% பங்களிப்பு 28 பேருக்கு தரும் மாதாந்திர பென்ஷனுக்கு சமம்.
சம்பளத்தைவிட பென்ஷன் அதிகம்
மத்திய அரசைப் பொறுத்தவரை சம்பளத்துக்கான செலவு 14% ஆகவும் பென்ஷனுக்கான செலவு 19% எனவும் தற்போது தெரிவித்துள்ளனர்.
அது மட்டுமல்லாமல், சம்பளதாரரின் எண்ணிக்கை 48.41 லட்சமாகவும், பென்ஷன் பெறுவோரின்எண்ணிக்கை 6,203 லட்சமாகவும் உள்ளது. பணியாளர்களின் எண்ணிக்கை சமீப காலத்தில் அதிகரிப்பதற்கான வாய்ப்பு குறைவு. ஆனால், (பழைய) பென்ஷன் பெறுவோர் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கிறது. எனவே எந்த ஒரு பணி பிரிவினருக்கும் பழைய பென்ஷனைமீண்டும் அமலாக்கம் செய்வதனாலும் மத்திய அரசு மேற்கண்ட காரணிகளை பரிசீலிக்கக் கூடும்.
பழைய விதி என்ன?
உயர்நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்து 24 மணி நேரம் ஆவதற்கு முன்பே, தொடர்புடைய பணியாளர் மற்றும் ஆயுத படையில் உள்ளவர்களின் பெற்றோர், மனைவி முதலானோர் கேட்டுள்ள முதன்மை சந்தேகம் என்னவென்றால், ‘மத்திய குடிமைப்பணி (பென்ஷன்) விதிகள் 1972-ன்படி பென்ஷன் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதே… அப்படியானால் தற்போது அமலாக்கம் பெற்றுள்ள ‘மத்திய குடிமைப்பணி (பென்ஷன்) விதிகள் 2021-ன்படி ஓய்வுக்காலப் பணப்பலன் கிடைக்காதா? என்பதுதான்.
இக்கேள்விக்கான காரணம் என்னவெனில், 1972-ஆம் ஆண்டு பென்ஷன் விதிகளைவிட 2021-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள பென்ஷன் விதிகளின்படி கிடைக்கக்கூடிய ஒய்வுக்காலப் பணப்பலன் அதிகமாக இருக்கும் என்பதுதான்.
இதிலிருந்து தெரியவரும் செய்தி என்னவெனில், மத்திய அரசிலும் சரி, மாநில அரசுகளிலும் சரி. பங்களிப்பு பென்ஷன் திட்டத்தின் கீழ் உள்ள ஊழியர்கள், பழைய பென்ஷன் பற்றிய விவரங்களை நன்கு தெரிந்து வைத்துக்கொண்டு, ‘எப்போது கிடைக்கும்?’ என்று எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் என்பதே.
மீண்டும் பழைய பென்ஷன் அல்ல
மத்திய ஆயுதப்படையினருக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பானது, பங்களிப்பு பென்ஷனிலிருந்து பழைய பென்ஷனுக்கு மாறுவதல்ல. மாறாக, மத்திய அரசு நேஷனல் பென்ஷன் சிஸ்டத்தை அமலாக்கம் செய்வதற்காக கடந்த 22.12.2003 அன்று வெளிட்ட என்.பி.எஸ் ஆணை மத்திய ஆயுதப்படையினருக்குப் பொருந்தாது என்ற அடிப்படையிலானது. எனவே, இந்த சரித்திரப் புகழ் பெற உள்ள தீர்ப்பு மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது.
தற்போதைய நிலையில் படை வாரியாக மத்திய ஆயுதப்படையினரின் எண்ணிக்கை பின்வருமாறு-
-
அஸ்ஸாம் ரைபில்ஸ் = 63,747
-
பார்டர் செக்யூரிட்டி போர்ஸ் (BSF) = 2,73,476
-
சென்ட்ரல் இன்டஸ்டிரியல் செக்யூரிட்டி போர்ஸ் (CISF) = 1,48,371
-
சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் போர்ஸ் (CRPF) = 3,24,340
-
இந்தோ திபெத்தியன் பார்டர் போலீஸ் (ITBP) = 89,567
-
நேஷன் செக்யூரிட்டி கார்ட் (NSG) = 10,000
-
சகஸ்ட்ரா சீமா பால் (SSB) = 97,244. ஆக மொத்தம் 10,06,745
இதில் ரயில்வே புரடக்சன் போர்ஸ் (76,563) ஸ்பெஷல் ஃப்ராண்டியர் போர்ஸ் (10,000) மற்றும் ஸ்பெஷல் புரடக்சன் குரூப் (300) சேர்க்கப்படவில்லை. இவை தீர்ப்பின் கீழ் வரவில்லை. காரணம், மத்திய அரசின் உள்துறையின் கட்டுபாட்டில் உள்ளவை அல்ல.