பழநி: பழநி மலைக்கோயிலில் கும்பாபிஷேக பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், நாளை பூர்வாங்க பூஜைகள் துவங்க உள்ளன. இதனால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், பழநியில் உள்ள பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு, அதிக பக்தர்கள் வந்து செல்கின்றனர். மாநிலத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் ஒன்றாக திகழ்கிறது. இக்கோயிலில் கடந்த 2006ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். இதன்படி 2018ல் நடைபெற்றிருக்க வேண்டிய கும்பாபிஷேகம் அதிமுக அரசின் மெத்தனத்தால் நடத்தப்படவில்லை. இந்நிலையில், பழநி கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் அடிப்படையில், கும்பாபிஷேகம் நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக பணிகளுக்காக கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாலாலயம் நடத்தப்பட்டது. ஆனால், பாலாலயம் செய்து 2 வருடங்களாகியும் பணிகள் விறுவிறுப்படையாமல் இருந்து வந்தது.
திமுக ஆட்சி அமைந்ததும் பணிகள் விறுவிறு:
திமுக ஆட்சி வந்த பின்பு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பழநி கோயிலில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கும்பாபிஷேக பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து கோபுரங்கள் சீரமைப்பு, மண்டபங்கள் புனரமைப்பு ஆகிய கும்பாபிஷேக பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்நிலையில், பழநி கோயிலில் கும்பாபிஷேகம் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் அறிவித்துள்ளது. இதற்கான முகூர்த்தக்கால் நடுதல் நிகழ்ச்சி மலைக்கோயிலில் கடந்த டிசம்பர் மாதம் 25ம் தேதி நடந்தது. தொடர்ந்து யாகசாலைகள் அமைப்பது, தங்கக்கோபுரம் புனரமைப்பு ஆகிய பணிகள் நடந்து வருகின்றன.
முக்கிய நிகழ்வாக பூர்வாங்க பூஜை நாளை (புதன்) மாலை நடைபெற உள்ளது. இதன்காரணமாக சாயரட்சை பூஜை, நாளை ஒருநாள் மட்டும் மாலை 4 மணிக்கு நடைபெறும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 23ம் தேதி மாலை முதல் 23ம் தேதி முதற்கால யாகசாலை பூஜை ஆரம்பித்து சுவாமியை கலசத்தில் ஆவாஹணம் செய்து யாகசாலையில் எழுந்தருள்வார். எனவே, 23ம் தேதி மாலை 3 மணி வரை பக்தர்கள் வழக்கமான மூலவர் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். அதன்பின், 27ம் தேதி கும்பாபிஷேகம் முடிவடைந்து மகா தீபாராதனைக்கு பின் பக்தர்கள் வழக்கம்போல் மூலவரை சாமி தரிசனம் செய்யலாம். 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை காலபூஜை கட்டளைகள், தங்கரத புறப்பாடு இருக்காது. 28ம் தேதி வழக்கம்போல் காலபூஜை கட்டளைகள் மற்றும் தங்கரத சுவாமி புறப்பாடு நடைபெறுமென பழநி கோயில் இணை ஆணையர் நடராஜன் தெரிவித்துள்ளார்.