சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வளர்ச்சி திட்டப் பணிகளை சிறப்பான முறையில் மேற்கொள்ளும் வகையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (CMDA) செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் கோயம்பேடு பேருந்து நிலையம், கோயம்பேடு மொத்த காய்கறி சந்தை, CMRTS, வெளிவட்ட சாலை, மாதவரம் மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்கள் உள்ளிட்டவை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
ஏரி மேம்பாட்டு திட்டம்
இதுதவிர புதிதாக சில களப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதில் ஏரி மேம்பாட்டு திட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏரிகளை பொறுத்தவரை நகரின் உள்கட்டமைப்பில் முக்கியமான ஒன்று. பல்லுயிர் பெருக்கத்திற்கு உதவுகின்றன. இதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றுப்புறச் சூழலை மேம்படுத்துகிறது. மழை, வெள்ள காலங்களில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கின்றன.
பருவநிலை மாற்ற சிக்கல்கள்
நகரம் வெப்பம் அடையாமல் தடுக்க, பருவநிலை மாற்ற சிக்கல்களை சமாளிக்க முக்கிய பங்காற்றுகின்றன. முதல்கட்டமாக சென்னையில் உள்ள 10 ஏரிகளில் 100 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்வதே திட்டமாகும். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் ஏரிகளை சர்வதேச அளவிற்கு தரம் உயர்த்துவது, பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டு வருவது ஆகும்.
எந்தெந்த ஏரிகள்
இதற்கான தேர்வில் பெரும்பாக்கம், ரெட்டேரி, முடிச்சூர், மாதம்பாக்கம், செம்பாக்கம், அயனம்பாக்கம், வேளச்சேரி, ஆதம்பாக்கம், புழல், கொளத்தூர் ஆகிய ஏரிகள் இடம்பெற்றுள்ளன. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் முன்னெடுக்கவுள்ள திட்டத்தின் படி, ஏரிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். குப்பைகள் ஏரி நீரில் கலக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புதிய வசதிகள்
ஆகாயத் தாமரைகள் தூர்வாரப்படும். நாட்டு தாவரங்கள் வளர்ப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஏரிகளின் எல்லைகள் நிர்ணயம் செய்யப்படும். பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நடைபாதை, இருக்கை வசதிகள், இயற்கை விளக்க மையங்கள், பறவைகள் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படும்.
பொழுதுபோக்கு அம்சங்கள்
இனிமையாக பொழுதை கழிக்க படகு வசதி, பட்டாம்பூச்சி தோட்டங்கள், வனப் பாதைகள், மலர் தோட்டங்கள் உண்டாக்கப்படும். கடைகள், உணவகங்கள் கொண்டு வரும் திட்டமும் இருக்கிறதாம். இவற்றின் செலவிற்கு சி.எம்.டி.ஏ நிதி ஒதுக்கி செயல்படுத்தும். பராமரிப்பு செலவிற்கு வாடகை அடிப்படையில் திட்டங்களை செயல்படுத்த உள்ளனர்.
நெருக்கடி குறையும்
இந்த விஷயத்தில் சி.எம்.டி.ஏ, சென்னை மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள், தனியார் ஆகியோர் கைகோர்த்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரே இடத்தில் பொதுமக்கள் குவியும் நிலை தவிர்க்கப்பட்டு, தங்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகிலுள்ள பொழுதுபோக்கு அம்சங்களில் நேரம் செலவிட வாய்ப்பு உண்டாகும். சென்னை மாநகரின் நெருக்கடியான நிலை குறையும் எனச் சொல்லப்படுகிறது.