விபத்தை தட்டிக்கேட்டதால் ஆத்திரம் ஒரு கி.மீ தூரம் ஸ்கூட்டரில் இழுத்து செல்லப்பட்ட கார் டிரைவர்

பெங்களூரு: பெங்களூரு மாகடிரோடு சுங்கச்சாவடி அருகே விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோட முயன்றவரை மடக்கி பிடிக்க வந்த கார் டிரைவரை ஒரு கிலோ மீட்டர் ஸ்கூட்டரில் இழுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு மாகடி சாலையில் உள்ள சுங்கச்சாவடி அருகே கார் மீது ஸ்கூட்டர் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இதில் கார்  சேதம் அடைந்தது. இதுகுறித்து கார் டிரைவர் ஸ்கூட்டர் ஓட்டி வந்தவரிடம் இறங்கி வந்து விசாரித்துக்கொண்டிருந்தார். அப்போது ஸ்கூட்டரில் வந்தவர் அங்கிருந்து தப்பிசெல்ல முயன்றார். அவரை தடுக்க கார் டிரைவர் ஸ்கூட்டரின் பின்னால் உள்ள கம்பியை பிடித்து இழுத்துள்ளார். இருப்பினும் வாலிபர் வாகனத்தை வேகமாக ஓட்டி சென்றார். ஆனால் கார் டிரைவர் அவரை விடவில்லை. இருசக்கர வாகன பின் கம்பியை கெட்டியாக பிடித்து கொண்டார். இதனால் சாலையில் விழுந்து புரண்டு  ஒரு கிமீ தூரம்  இழுத்து செல்லப்பட்டார்.

வயதான நபரை பைக்கில் இழுத்து சென்றதை பார்த்த வாகனஓட்டிகள் தங்கள் வாகனத்தை குறுக்கே நிறுத்தி அந்த வாலிபரை வழிமறித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விஜயநகர் போலீசார், காயமடைந்த கார் டிரைவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். போலீசார் விசாரணைக்கு பயந்து பைக் ஓட்டி வந்த வாலிபர்  விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனே அவரையும் மீட்ட போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து பைக் ஓட்டி மீது விஜயநகர் போக்குவரத்து மற்றும் கோவிந்தராஜ்நகர் காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.   கார் டிரைவர் இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.