”விமானத்தின் எமெர்ஜென்சி கதவை திறந்த விவகாரத்தில், பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா மன்னிப்பு கேட்டுவிட்டார்” என மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு (2022) டிசம்பர் 10ஆம் தேதி இண்டிகோ விமானத்தில் சென்னையிலிருந்து திருச்சிக்குப் பயணம் செய்தபோது, விமானத்தின் அவசரகால கதவை பெங்களூரு பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா திறந்ததாகச் செய்திகள் வெளியாகின. மேலும், அச்சம்பவம் குறித்து அப்போது தேஜஸ்வி யாதவ் மன்னிப்பு கடிதம் கொடுத்ததாகவும், அவருடன் பயணித்தது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என்றும் தகவல் வெளியானது. இதுகுறித்து அந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் ஊடகம் ஒன்றிடம், ‘தேஜஸ்வி யாதவ்தான் விமானத்தின் அவசரகால கதவைத் திறந்தார் என்றும், அவருடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் உடனிருந்தார் என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும் அவர், “இதனால் எல்லாப் பயணிகளும் இறக்கிவிடப்பட்டனர். அதைத் தொடர்ந்து தேஜஸ்வியிடம் மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கப்பட்டது. பிறகு அதே விமானத்தில் பயணிக்க மாற்று இருக்கை ஒதுக்கப்பட்டது. இதனாலேயே விமானம் புறப்பட 2 மணி நேரம் தாமதமாகியது” எனக் கூறியிருந்தார்.
இந்த கட்டுரையின் முழு விவரத்தையும் படிக்க இங்கே கிளிக் செய்யவும். ’விமானத்தில் அவசரகால வழியை திறந்தது தேஜஸ்வி; உடனிருந்தது அண்ணாமலை’-சக பயணி பரபரப்பு பேட்டி
இதையடுத்து, இந்த விவகாரம் நேற்று மீண்டும் பேசுபொருளானது. இதுகுறித்து டிசம்பர் மாதமே (29ஆம் தேதி), தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மறைமுகமாகத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். விமானத்தின் அவசரகால கதவைத் திறப்பது சட்டப்படி குற்றம். அப்படித் திறந்தவர்கள் மீது கடந்தகாலங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இந்த விஷயத்தில் அரசாங்கமும், இண்டிகோ நிறுவனமும் இதுவரை எந்தப் பதிலும் தரவில்லை என விமர்சனம் வைக்கப்பட்டது. அதேநேரத்தில், இதுகுறித்து விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம், பாஜக எம்பிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், இதுகுறித்து நேற்றைய தினம் மத்திய விமான இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, இந்த விஷயத்தில் தேஜஸ்வி சூர்யா மன்னிப்பு கேட்டுள்ளதாகவும், கதவு தவறுதலாகத் திறக்கப்பட்டது என்றும், அதற்காக அவர் வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், தேஜஸ்வி சூர்யா மீது உகந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM