ராமநாதபுரம் அருகே 350 ஆண்டு பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே சே.கொடிக்குளம், கழுநீர்பாலமுருகன் கோயில் வளாகத்தில் ஒரு கல்வெட்டு இருப்பதாக பேரையூர் ஆசிரியர் முனியசாமி தகவல் தெரிவித்தார். இதன் பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தலைவர் ராஜகுரு அக்கல்வெட்டை ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:
நான்கரை அடி உயரம், ஒன்றரை அடி அகலம் உள்ள கடல்பாறை கல்தூணின் 2 பக்கத்தில் கல்வெட்டும், ஒரு பக்கத்தில் செங்கோல், சூரியன், சந்திரன் கோட்டுருவாக பொறிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டு மொத்தம் 26 வரிகள் கொண்டது. முதல் பக்கத் தொடர்ச்சியாக அடுத்த பக்கத்தில் வரும் கல்வெட்டு எழுத்துகள் பெரும்பாலும் அழிந்தநிலையில் உள்ளதால், சில சொற்களை கண்டறிய முடியவில்லை.

ஸ்வஸ்திஸ்ரீ எனத் தொடங்கி போவாராகவும் என கல்வெட்டு முடிகிறது. புண்ணிய காலத்தில் ரகுநாத திருமலை சேதுபதி காத்ததேவருக்கும், ஆதினாராயன் தேவருக்கும் புண்ணியமாக ரகுநாத தேவர் அன்னதான பற்றுக்குக் சே.கொடிக்குளம் என்ற ஊர் சர்வ மானியமாக கொடுத்துள்ளார். கல்வெட்டில் தமிழ் எண்களில் சக ஆண்டு 1594 சொல்லப்பட்டுள்ளது. இதன் தற்போதைய ஆண்டு கி.பி 1672 ஆகும்.

 சர்வ மானியமாக தான் வழங்கிய இத்தானத்திற்கு கெடுதல் செய்வோர் கெங்கைக்கரையிலும், சேதுக்கரையிலும் மாதா, பிதா, குருவையும், காராம் பசுவையும் கொன்ற தோஷத்திலே போவர் என கல்வெட்டின் இறுதியில் வரும் ஓம்படைக்கிளவி தெரிவிக்கிறது. ஆதினாராயன் தேவர் என்பவர் இவ்வூரைச் சேர்ந்த சேதுபதிகளின் அரசப் பிரதிநிதியாக இருக்கலாம். புனித நீராட இந்தியா முழுவதும் இருந்து தனுஷ்கோடி, ராமேஸ்வரம் வருவோருக்கு  உணவு, நீர், தங்கும் இடம் வழங்க 5 மைல் தூரத்திற்கு ஒன்று என்ற அளவில் பரவலாக மடம், சத்திரங்களை சேதுபதி மன்னர்கள் உருவாக்கியுள்ளனர்.

 மன்னரால் இவ்வூரில் கட்டப்பட்ட அன்னதான மடம் கோயிலின் தென் பகுதியில் இருந்து அழிந்துள்ளது. எஞ்சிய அதன் 10 அடி நீள சிறிய சுவர் தற்போதும் இங்கு உள்ளது. இக்கோயிலில் சங்க இலக்கியங்களில் பாலைத் திணைக்கு உரியதாக சொல்லப்படும் மருத்துவக் குணமுள்ள உகாய் மரம் வளர்ந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.