ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவ காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி 4 ஆம் தேதி உயிரிழந்ததை அடுத்து, அந்த தொகுதிக்கான சட்டசபை இடைத்தேர்தல் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியானதை அடுத்து, தமிழ்நாடு முழுவதும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அதற்கு காரணம், அந்த தொகுதியில் போட்டியிட பல கட்சிகள் விரும்புவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்த வரை தேர்தல் என்றாலே திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி இடையே கடும் போட்டி இருக்கும். திமுக, அதிமுக கூட்டணி சார்பில் எந்த கட்சி வேட்பாளர் போட்டியிடுவார் அல்லது திமுக மற்றும் அதிமுக நேரடியாக தங்கள் வேட்பாளரை களத்தில் இறக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டது. த.மா.கா சார்பில் போட்டியிட்ட யுவராஜ் தோல்வியை தழுவினார். அதேபோல திமுக தலைமையிலான கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திருமகன் ஈவெரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், இந்தமுறை யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அதிமுக சார்பில் வேட்பாளர் போட்டியிட்டால், “பி” விண்ணப்பத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் இணைந்து ஒன்றாக கையெழுத்திடுவார்களா? எனக் கேள்வி எழுந்துள்ளது. கடந்த சில மாதமாக அதிமுகவில் அரங்கேறி வரும் நடவடிக்கைகளை பார்த்தால் இருவரும் சேர்ந்து கையெழுத்து இட வாய்பில்லை என்றே தோன்றுகிறது. ஒருவேளை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தனித்தனியாக தங்கள் வேட்பாளரை போட்டியிட வைத்தால், இரட்டை இலை சின்னம் மீண்டும் முடங்கும் அபாயம் ஏற்படலாம். எனவே கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட தான் வாய்ப்பு அதிகம் எனத் தெரிகிறது.
கடந்த சட்டசபை தேர்தலின் போது ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், கூட்டணி தர்மபடி தமிழ் மாநில காங்கிரசுக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட வேண்டும். அப்படி நடக்குமா? இதுக்குறித்து அதிகாரபூர்வத் தகவல்கள் எதுவும் இல்லை.
மறுபுறம் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலை எதிர்கொள்ள தேர்தல் பணி குழுவை பாஜக அமைத்தது. இடைத்தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும் கவனிக்கவும் 14 பேர் கொண்ட பட்டியலை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். ஒருவேளை இந்த தொகுதி பாஜகவுக்கு கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அண்ணாமலை தோல்வி தழுவியதால். ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி கணக்கை தொடங்கவேண்டும் என தமிழக பாஜக தொண்டர்களின் எதிர்பார்ப்பு.
திமுக கூட்டணியை பொறுத்தவரை ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிகின்றன. ஆனால் கடந்த காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றார். கடைசி நேரத்தில் திமுகவே தங்கள் வேட்பாளரை களம் இறக்கக்கூடும் எனவும் தகவல். எதுவாக இருந்தாலும் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விவரம்
மனுத்தாக்கல் தொடக்கம் : ஜனவரி 31
மனுத்தாக்கல் கடைசி நாள் : பிப்ரவரி 7
மனுக்கள் பரிசீலனை : பிப்ரவரி 8
வாபஸ் பெற கடைசி தேதி : பிப்ரவரி 10
வாக்குப்பதிவு : பிப்ரவரி 27
வாக்கு எண்ணிக்கை : மார்ச் 2