பொருளாதார மந்தநிலை காரணமாக, உலகின் டாப் டெக் நிறுவனங்கள் அனைத்தும் பல மாதங்களுக்கு முன்பாகவே ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய ஆரம்பித்தது.
மெட்டா, ட்விட்டர், அமேசான் எனப் பல நிறுவனங்கள் சமீபத்தில் ஆட்குறைப்பு வேலையைச் செய்து வந்த நிலையில், அந்த வரிசையில் மைக்ரோசாப்ட் அதன் பணியாளர்களில் 5 சதவிகிதத்தினரை இன்று (ஜனவரி 18 புதன்கிழமை) நீக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் மனிதவளம் மற்றும் பொறியியல் பிரிவில் வேலை செய்யும் 10,000 ஊழியர்களை நீக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. மைக்ரோசாப்ட்டின் செயல் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான சத்யா நாதெல்லா பணியாளர்களில் 5 சதவிகிதத்தினரை குறைக்க உள்ளதாகவும், இது கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகமான பணிநீக்க நடவடிக்கையாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
கடந்த 5 வருடத்தில் இல்லாத அளவில் ஜூலை காலாண்டில் வருவாயில் மந்தமான வளர்ச்சியை இந்நிறுவனம் பதிவு செய்துள்ளது. எனவே லாபம் மற்றும் வருவாய் வளர்ச்சியில் ஏற்பட்ட சரிவின் காரணமாக இந்த பணிநீக்கம் நடக்கிறது என்றும் கூறுகின்றனர்.