ஜல்லிக்கட்டு பரிசு : காருக்கு பதில் விவசாய கருவி, மாடு, நிலம் வழங்கலாம் – தங்கர் பச்சான்

தமிழகத்தின் பெருமை மிகு பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு. பொங்கலை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன. குறிப்பாக மதுரையில் நடக்கும் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு மிகவும் பிரபலம். இந்த போட்டிகளில் வெற்றி பெறுவர்களுக்கு பரிசு வழங்கப்படுகின்றன. குறிப்பாக அதிக காளைகளை அடக்கிய வீரருக்கு முதல்பரிசாக கார் வழங்கப்படுகிறது. இதற்கு பதிலாக அந்த வீரருக்கு உழவுத் தொழில் தொடர்பான கருவிகள், நிலங்களை வழங்கலாம் என இயக்குனர் தங்கர்பச்சான் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை : ‛‛சென்ற ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டும் போட்டியில் வெற்றி பெற்ற ஜல்லிக்கட்டு வீரருக்கு கார் பரிசளித்த போது இதே கோரிக்கையை அரசிடம் அளித்திருந்தேன். அதேபோல் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு வீரருக்கும், மாட்டின் உரிமையாளருக்கும் முதல் பரிசாக மகிழுந்து (கார்) வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

வீரர்கள் உயிரைப்பணயம் வைத்து பங்கு பெரும் இப்போட்டிகளை நடத்துவதில் ஒவ்வொரு தமிழரும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகின்றோம்! இப்போட்டியில் வென்றவர்களை ஊக்குவிக்கும் விதமாக வழங்கப்படும் பரிசுகள் குறித்து இப்பொழுதாவது அரசு சிந்திக்க வேண்டியுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டுகளில் இதேபோல் காரினைப் பரிசாகப் பெற்ற வீரர்கள் எந்த அளவுக்கு வாழ்க்கையில் உயர்ந்திருக்கிறார்கள்? எந்த மாதிரியான வாழ்க்கையை இப்போது அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

காரின் தொகைக்கு ஈடாக அந்த வீரனுக்கு உழவுத் தொழில் தொடர்பான கருவிகள், மாடுகள்,நிலம் இவைகளைத் தந்து அவருடைய வாழ்வுக்கு முன்னேற்றம் ஏற்படுத்தித் தந்தால் இன்னும் கூடுதலான மகிழ்ச்சியை நாம் அடையலாம்! பரிசு தரும் காரை வைத்துக்கொண்டு (எரிபொருள்) பெட்ரோல் டீசல் விற்கும் விலையில் அதற்கு செலவழிப்பதற்காகவே அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் போராட வேண்டியிருக்கும் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். தயவு கூர்ந்து முதல்வர் இக்கோரிக்கைக் குறித்து சிந்தித்து செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.