உடுமலை: 20 ஆண்டுக்கு முன்பு இயக்கப்பட்ட திண்டுக்கல்- கோவை பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை- திண்டுக்கல் இடையே 20 வருடங்களுக்கு முன் மீட்டர்கேஜ் ரயில் பாதையில் (வண்டி எண் 771 / 772) பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. இதை, மீண்டும் விடவேண்டும். இந்த ரயில் இயக்கப்பட்டால் கிராமங்களில் இருக்கும் விவசாயிகள், மாணவர்கள், தினசரி பயணிக்கும் பயணிகள், வணிகர்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த வழித்தடத்தில் பாலக்காடு கோட்டத்தை போல மெமு ரயிலை பயன்படுத்தலாம். சென்னை, பெங்களூர், ஐதராபாத், கொச்சி மற்றும் பல நகரங்களுக்கு கோயம்புத்தூர் மற்றும் திண்டுக்கல் வழியாக இரு மார்க்கங்களிலும் செல்வதற்கு வழிவகுக்கும். இந்த வழித்தடத்தில் கோவை, போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கோமங்கலம், உடுமலை, மைவாடி சாலை, மடத்துக்குளம், புஸ்பத்தூர், பழனி, சத்திரப்பட்டி, ஒட்டன்சத்திரம், அக்கரைப்பட்டி, திண்டுக்கல் உள்ளிட்ட 14 ரயில் நிலையங்களைப் பயன்படுத்துவதன் மூலம் சுமார் 70 லட்சம் பேர் பயனடைவார்கள். இதன் மூலம் ரயில்வேக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதுடன், பயணிகள் பாதுகாப்பாக பயணிக்க முடியும்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சண்முகசுந்தரம், பி.ஆர்.நடராஜன் மற்றும் எம்எல்ஏக்கள் வானதி சீனிவாசன், தாமோதரன், பொள்ளாச்சி ஜெயராமன், உடுமலை ராதாகிருஷ்ணன், மகேந்திரன், ஐ.பி. செந்தில் குமார், திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் தமிழக அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் இந்த ரயில் சேவையை உடனடியாக தொடங்குமாறு ரயில்வே அமைச்சர் ஸ்ரீஅஸ்வினி வைஷ்ணவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த ரயில் சேவையை விரைவில் மீண்டும் துவங்கி தென்னக ரயில்வேயின் மதுரை, பாலக்காடு, சேலம் ஆகிய மூன்று கோட்டங்களும் பொதுமக்களின் நலனுக்காக ஒருங்கிணைந்து செயல்பட்டு மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் பயணிகள் பலரும் வலியுறுத்தி உள்ளனர். தற்போது, பொங்கல் பண்டிகைக்காக 5 நாட்கள் சிறப்பு ரயிலாக இயக்கப்பட்ட ரயிலை பழனி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நீட்டிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.