செங்கல்பட்டு: பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தவர்கள் இன்று முதல் சென்னைக்கு திரும்பி வருகின்றனர். இதனால் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஸ்தம்பித்தது. பொங்கல் பண்டிகை முன்னிட்டு சென்னையில் வசித்துவருகின்றவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு கிளம்பி சென்று விட்டனர்.
அங்கு பொங்கல் பண்டிகை கொண்டாடிவிட்டு விடுமுறை முடிந்ததும் மீண்டும் சென்னைக்கு திரும்பி வருகின்றனர். நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மொத்தமாக மக்கள் அனைவரும் கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் அரசு, தனியார் பஸ்களில் சென்னைக்கு திரும்புவதால் சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதனால் வாகனங்கள் மெதுவாக செல்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக அனைத்து சுங்கச்சாவடிகளிலும் வாகனங்கள் பல கி.மீ. தூரத்துக்கு அணிவகுத்து நிற்பதால் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புலிப்பாக்கம் பகுதியில் இருந்து பரனூர் சுங்கச்சாவடி வரை சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனகள் அணிவகுத்து நிற்கிறது. வாகனங்கள் செல்வதற்கு போக்குவரத்து போலீசார் வழிவகை செய்து வாகனங்களை அனுப்பிவைத்து வருகின்றனர்.
அச்சிறுப்பாக்கம் அடுத்த தொழுப்பேடு ஆத்தூர் சுங்கச்சாவடியிலும் பல கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் ஊர்ந்து செல்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் புதுச்சேரி, திருவண்ணாமலை, திருச்சி, சென்னை மார்க்கமாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் சங்கமிப்பதால் மேலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர். போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் போக்குவரத்து போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை அருகே உள்ள தைலாவரம், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், காரணை புதுச்சேரி கூட்டு சாலை, கூடுவாஞ்சேரி-நெல்லிகுப்பம் சாலை, வண்டலூர், ஓட்டேரி, பெருங்களத்தூர், வண்டலூர், கேளம்பாக்கம் சாலையிலும் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் தவிக்கின்றனர். இதன்காரணமாக தாம்பரத்தில் இருந்து சென்னை நகர் வரை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் போக்குவரத்து போலீசார் தீவிரமாக ஈடுபட்டு போக்குவரத்தை சீரமைத்து மக்களுக்கு இடைஞ்சல் இன்றி செல்ல ஏற்பாடு செய்து வருகின்றனர்.
சுங்கச்சாவடியில் இலவசம்
சென்னை – திருச்சி மற்றும் திருச்சி – சென்னை மார்க்கமாக செல்லும் வாகனங்களை வழக்கமாக 6 பூத்களில் மட்டுமே அனுப்பப்படும். இன்றைய தினம் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தென் மாவட்டத்தில் இருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்களை 8 பூத்களில் கட்டணமில்லாமல் அனுமதித்து வருகின்றனர். இதன்காரணமாக போக்குவரத்து நெரிசல் வெகுவாக தவிர்க்கப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, தென் மாவட்டத்தில் இருந்து பரனூர் சுங்கச்சாவடியில் இறங்கி ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்லக்கூடிய மக்கள் நள்ளிரவு முதலே பேருந்து இல்லாமல் கொட்டும் பனியில் குழந்தைகளுடன் காத்திருந்தனர். அதிகாலை முதல் திருவள்ளூர் பேருந்து வந்தாலும் பேருந்தில் இடமில்லாமல் பல மணி நேரம் காத்திருக்கின்றனர். சென்னையை நோக்கி அதிகளவில் பேருந்துகள் இருந்தாலும் ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர் பகுதிகளுக்கு கூடுதல் பேருந்து வசதிகள் செய்யவில்லை என்பதால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் வேலைக்கு செல்ல வேண்டியவர்கள் சிரமத்துக்கு ஆட்பட்டனர்.