2013ஆம் ஆண்டு, பல ஐரோப்பிய நாடுகளில், மாட்டிறைச்சி பர்கரில் குதிரை டிஎன்ஏ கண்டுபிடிக்கப்பட்ட விடயம் அதிர்ச்சியை உருவாக்கியது நினைவிருக்கலாம்.
தற்போது, அதேபோல, உண்ணத்தகுதியில்லாத குதிரை இறைச்சியை விற்ற வழக்கில் 15 பேருக்கு பிரெஞ்சு நீதிமன்றம் ஒன்றில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளை அதிர்ச்சியடைய வைத்த வழக்கு
2013ஆம் ஆண்டு, ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் விற்கப்பட்ட மாட்டிறைச்சி பர்கரில் வேறு ஏதோ இறைச்சி கலந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் அயர்லாந்து உணவு பாதுகாப்பு ஏஜன்சி அதிகாரிகள் சோதனைகள் நடத்தினார்கள்.
சோதனை முடிவுகள், மாட்டிறைச்சி பர்கர் என கூறப்பட்ட பர்கரில் குதிரை இறைச்சி, சில இடங்களில் பன்றி இறைச்சி ஆகியவற்றின் டிஎன்ஏ இருப்பதைக் காட்டின. இந்த விடயம் பல ஐரோப்பிய நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மீண்டும் குதிரை இறைச்சி தொடர்பில் ஒரு மோசடி
தற்போது, உண்ணத்தகுதியில்லாத குதிரை இறைச்சியை விற்ற வழக்கில், 15 பேருக்கு பிரெஞ்சு நீதிமன்றம் ஒன்று தண்டனை வழங்கியுள்ளது.
பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 15 பேருக்கு பிரான்சின் Marseille நகர நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பெல்ஜியம் நாட்டவரான குதிரை வியாபாரி Jean-Marc Decker, நெதர்லாந்து நாட்டவரான Stijn De Visscher, பிரான்சிலுள்ள Equi’d Sud நிறுவனத்தின் மேலாளரான Georges Gonzales உட்பட 15 பேருக்கு அபராதமும் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பிரான்ஸ் நாட்டவரான Georges Gonzalesக்கு, குதிரை மாமிசம் தொடர்பான தொழிலில் ஈடுபட ஐந்து ஆண்டுகளுக்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.