ஈரோட்டில் இறங்கும் எடப்பாடி; பாஜகவை பந்தாட மாஸ் ப்ளான்!

தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. இதையடுத்து திமுக ஆட்சி கட்டிலில் அமர்ந்தது. இதன் தொடர்ச்சியாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருமே பதவி இழந்தனர்.

இதன் பிறகு அதிமுக என்கிற மாபெரும் கட்சியை வழிநடத்துவது யார்? என்பதில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடையே நேரடியாக மோதல் ஏற்பட்டது.

இதன் ஒரு பகுதியாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.

இதில் டென்ஷனான ஓ.பன்னீர்செல்வம் அதிமுக பொதுக்குழு மற்றும் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று உத்தரவு பிறப்பிக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு உச்சநீதி மன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றது. இந்த விவகாரத்தில் விரைவில் தீர்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், 2024ம் ஆண்டு வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை கருதி ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்கி கூட்டணி அமைத்துக்கொள்ள பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

பாஜகவின் நரித்தனமான இந்த எண்ணத்துக்கும், ஓபிஎஸ் மற்றும் சசிகலா ஆகியோரைக் கொண்ட ஒருங்கிணைந்த அதிமுக உருவாகவும் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.

இதனால் என்ன செய்வது? என புரியாமல் பாஜக குழம்பி கிடக்கும் சூழலில் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4ம் தேதி திடீர் மரணம் அடைந்தார்.

இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு சட்டபேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ம் தேதி நடைபெறும் என, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த தொகுதியில் கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவெரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதேப்போன்று அதிமுக கூட்டணியில் தமாகா சார்பில் யுவராஜ் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தலில் மீண்டும் போட்டியிட தமாகா விருப்பம் தெரிவித்துள்ளது. ஆனால் அதிமுகவினர் பூத் கமிட்டி போட்டு அமைத்து தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது.

அதிமுக சார்பில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம் அல்லது முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு என இருவரில் ஒருவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கிய 6 மாத காலத்தில் 1973ம் ஆண்டு திண்டுக்கல் தொகுதி இடைத்தேர்தலில் மாயத்தேவரை நிறுத்தி வெற்றி பெற்றார். அதேபோல் எம்ஜிஆர் பாணியில் 1989ம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் ஜெயலலிதா அணி 27 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், எடப்பாடி பழனிச்சாமியும் ஒருவர் ஆவார்.

எனவே எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளர் நிறுத்தி வெற்றி பெற செய்ய வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் விரும்புகின்றனர்.

இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் தன்னுடைய தலைமைக்கு அங்கீகாரம் கிடைக்கும் விதமாக ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவை களம் இறக்க எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒருவேளை ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக, ஓ.பி.எஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரின் ஆதரவு இல்லாமல் அதிமுக வெற்றி பெறுமேயானால் இனிமேல் பாஜகவின் மிரட்டல்.. உருட்டல்களுக்கு அஞ்ச தேவையில்லை என்பது தான் எடப்பாடி போடும் கணக்கு.

அதிமுக தலைமை பதவிக்கான மோதல் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் எடப்பாடி தரப்பு இடைத்தேர்தல் பணியை துவக்கி இருப்பது பாஜக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

அதே சமயம் மிரட்டி பணிய வைக்க முயலும் பாஜகவை ஈரோடு கிழக்குத் தொகுதியில் பந்தாட செய்ய எடப்பாடி பழனிச்சாமி தயாராகி விட்டதாக அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.