கொரோனா ஊரடங்கில் ஆதரவற்று தவித்த பெண் ஓராண்டிற்கு பின் மகனிடம் ஒப்படைப்பு

நெல்லை: தூத்துக்குடி  மாவட்டம், சாத்தான்குளம் அருகே நன்னீர்குளத்தை சேர்ந்தவர்  உஷாராணி (44). இவரது மகன் ராகேஷ் (24), மனைவி மற்றும் குடும்பத்துடன்  திருவனந்தபுரத்தில் தங்கி, ஓட்டலில்  வேலை பார்க்கிறார். நன்னீர்குளத்தில் தனியாக இருந்த உஷா ராணி, 2021  டிசம்பரில் கொரோனா பரவலின்போது நெல்லை  அருகே கொண்டாநகரம் பகுதிக்கு வந்தவர் ஆதரவற்று தவித்தபடி நின்றார். அவரை கண்டியப்பேரி ஆதரவற்றோர் இல்லத்தில் வைத்து சிகிச்சை அளித்துப்  பராமரித்தனர்.  இதனால் அவர் படிப்படியாக உடல்நலம் மற்றும் மனநலம் தேறினார்.  இதையடுத்து உஷாராணியிடம் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மீட்பு  மற்றும் அவசர சிகிச்சை மையத்தின் (இசிஆர்சி) சமூக பணியாளர்கள், அவரது குடும்பம் குறித்து விசாரித்தனர்.

அப்போது  உஷாராணி அளித்த தகவலின் பேரில் பல்வேறு இடங்களில் விசாரித்து  திருவனந்தபுரத்தில் இருந்த மகன் ராகேஷுக்கு தெரிவித்தனர். இதையடுத்து  ராகேஷ் குடும்பத்துடன் நேற்று நெல்லை வந்தார். கொரோனா  ஊரடங்கால் ஓராண்டுக்கு மேலாக தாயை பிரிந்திருந்த மகன் ராகேஷ், தாயை நேரில் கண்டு மனம் நெகிழ்ச்சி அடைந்தார்.  பின்னர் உஷாராணி மற்றும் குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்திற்கு  வரவழைக்கப்பட்டனர். கலெக்டர் விஷ்ணு, உஷாராணிக்கு பழக்கூடை வழங்கி வாழ்த்தி மகனுடன் வழியனுப்பி வைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.