திருமலை: தெலங்கானாவில் காதலிக்கும்படி தங்கைக்கு தொல்லை கொடுத்த சக மாணவரை தாக்கியது தொடர்பாக பாஜ தலைவர் பண்டி சஞ்சய் மகன் பகிரத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம், குத்புல்லாபூர் அடுத்த பகதூர்பள்ளியில் உள்ள மகேந்திரா பல்கலைக்கழகத்தில் பி.டெக் படித்து வருபவர் பகிரத். இவர் மாநில பாஜ தலைவர் பண்டி சஞ்சய் மகன் ஆவார். பகிரத் தன்னுடன் படிக்கும் ஸ்ரீராம் என்ற சக மாணவனை ஆபாச வார்த்தைகளால் திட்டியும், கொலை மிரட்டல் விடுத்தும் கடுமையாக தாக்கியுள்ளார். இதுதொடர்பான வீடியோ நேற்று முன்தினம் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதுகுறித்து பல்கலைக்கழக மாணவர் உயர்நிலை ஒருங்கிணைப்பாளர் துண்டிகல் போலீசில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில், பகிரத் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பகிரத்தால் தாக்கப்பட்ட மாணவர் ராம் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், ‘பகிரத்தின் தங்கைக்கு நான் இரவு நேரத்தில் காதலிக்கும்படி போன் செய்தும், மெசேஜ் செய்தும் தொந்தரவு செய்தேன். இதனை அறிந்த பகிரத் என்னை அழைத்து மிரட்டினார். அப்போது, நான் தகாத வார்த்தைகளால் பேசியதால் தான் பகிரத் என்னை தாக்கினார். மேலும், அனைத்தையும் மறந்து தற்போது நண்பர்களாக நாங்கள் ஒன்றாக இருக்கிறோம்’ என கூறினார்.
இதுகுறித்து பாஜ மாநில தலைவர் பண்டி சஞ்சய் கூறுகையில், ‘தைரியம் இருந்தால் தன்னுடன் அரசியல் செய்ய வேண்டும். இதுபோன்று பிள்ளைகளை வைத்து அரசியல் செய்யக் கூடாது. முதல்வர் சந்திரசேகரராவ் (கேசிஆர்) உனக்கு தைரியம் இருந்தால் என்னுடன் அரசியல் செய்ய வேண்டும். உங்கள் பேரனை பற்றி தவறான கருத்துக்களை சொன்னபோது நான் கண்டித்தேன். யாரும் எவ்வித கருத்துகளும் சொல்ல வேண்டாம் என கூறினேன். என் மகன் விவகாரத்தில் எப்போதோ நண்பர்களுக்குள் நடந்தவற்றை வைத்து இப்போது வீடியோ கொண்டு வந்து வழக்கு போடுவீர்களா?. அடிபட்ட மாணவர் தான் தவறு செய்ததை ஒப்புக் கொண்டார். மாணவர்கள் இடையே சண்டையிடுகிறார்கள். மீண்டும் ஒன்றாக சேர்ந்து விடுவார்கள். இந்த விவகாரத்தில் வழக்கு போட வேண்டிய அவசியம் என்ன? ’ என்றார்.