திருமலை: என்டிஆர் மாவட்டத்தில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி அலுவலக கட்டிடத்துக்கு வாடகை பிரச்னையில் பூட்டு போட்டதால் சாலையில் படுத்து மாஜி அமைச்சர் தேவிநேனி உமா ரத்ததானம் செய்தார். ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சி முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவின் 27வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, நேற்று என்டிஆர் மாவட்டம் விஜயவாடா புறநகர் பகுதியான கொல்லப்புடி பகுதியில் ரத்ததான முகாம் உள்ளிட்ட பல்வேறு சேவை நிகழ்ச்சிகளுக்கு அக்கட்சியினர் ஏற்பாடு செய்தனர். ஆனால், தெலுங்கு தேசம் கட்சி அலுவலகம் அமைந்துள்ள கட்டிடம் வாடகை விவகாரத்தில் தகராறில் உள்ளது.
இதனால், போலீசாருடன் அங்கு வந்த தாசில்தார் அலுவலகத்தை பூட்டி எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள விடாமல் தடுத்தார்.இதற்கு முன்னாள் அமைச்சர் தேவிநேனி உமா மற்றும் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், கொல்லப்புடி ஒன் சென்டரில் உள்ள என்டிஆர் சிலைக்கு மாலை அணிவித்தனர். தொடர்ந்து, யார் தடுத்தாலும் தங்கள் சேவையை தடுக்க முடியாது என கூறி சாலையில் படுத்துக் கொண்டு முன்னாள் அமைச்சர் தேவிநேனி உமா மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினர் ரத்தானம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.