நாமக்கல்: நாமக்கல் அதிமுக மாஜி எம்எல்ஏவின் சொத்துக்களை மதிப்பீடு செய்யும் பணியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று ஈடுபட்டனர். நாமக்கல் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர். இவர் 2 முறை நாமக்கல் எம்எல்ஏவாக இருந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம், பாஸ்கர் மற்றும் அவரது மனைவி உமா மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ. 4.72 கோடி சொத்து சேர்த்ததாக, நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதை தொடர்ந்து, ஆகஸ்ட் 12ம் தேதி, மோகனூர் கே.கே.நகரில் உள்ள பாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, ரூ. 26 லட்சம் ரொக்கம், ரூ. 1.20 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி மற்றும் சொத்து ஆவணங்கள், கடன் பத்திரங்கள், ஏராளமான ஆவணங்கள், சொத்து முதலீடுகள் கைப்பற்றப்பட்டது. மேலும், பாஸ்கரின் ஆதரவாளர்கள், உறவினர்கள் 28 பேரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும், அப்போது சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை நடந்த 5 மாதங்களுக்கு பிறகு, லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் தலைமையில், பொதுப்பணித்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர், நேற்று காலை 11 மணியளவில் மோகனூர் கே.கே.நகரில் உள்ள பாஸ்கரின் வீட்டுக்கு வந்தனர். இதுபற்றி அவருக்கு, ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு போலீசார் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். இதையடுத்து, அவரது முன்னிலையில் வீட்டை பொதுப்பணித்துறையினர் அளவீடு செய்தனர்.
மேலும், வீடு மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்களை வருவாய்த்துறையினர் சரிபார்த்தனர். அளவீடு செய்யும் பணியில், 10க்கும் மேற்பட்ட அலுவலர்கள் ஈடுபட்டனர். இதையொட்டி, முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் வீட்டின் அருகே அவரது ஆதரவாளர்கள் திரண்டனர். தொடர்ந்து மாலை வரை அளவீடு செய்யும் பணி நடைபெற்றது. அதன் பின்னர், லஞ்ச ஒழிப்பு துறை மற்றும் பொதுப்பணித்துறையினர் புறப்பட்டு சென்றனர்.