சென்னை விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட ரூ.1.59 கோடி மதிப்புள்ள 3.14 கிலோ கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் ல்பறிமுதல் செய்துள்ளனர்.
இதுகுறித்து, சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை கூடுதல் ஆணையர் கே.பி.ஜெயகர் தெரிவிக்கையில், “சென்னை விமான நிலைய சுங்கத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, ஜன.15-ம் தேதியன்று மஸ்கட் வழியாக துபாயிலிருந்து வந்த ஆண் பயணிகள் இருவரிடம் விசாரணை நடத்தினர்.
அவர்கள் தமது பைகளில் மடிக்கணினிக்குள் மறைத்து 900 கிராம் 24 கேரட் சுத்தத் தங்கம் கொண்டு வந்தது கண்டறியப்பட்டு அது பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல், அன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு சோதனையில் ஷார்ஜாவிலிருந்து வந்த இரு பெண் பயணிகளிடமிருந்து 766 கிராம் எடை கொண்ட 24 கேரட் சுத்தத் தங்கத்திலான 8 வளையல்களை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதேபோல், ஜன.16-ம் தேதியன்று மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது ஆண் பயணி ஒருவர் 645 கிராம் எடை கொண்ட 24 கேரட் சுத்தத் தங்கத்தை பசை வடிவில் கொண்டு வந்தது கண்டறியப்பட்டு அது பறிமுதல் செய்யப்பட்டது .
மேலும், அன்றையதினமே மேற்கொள்ளப்பட்ட மற்றொரு சோதனையின் போது கொழும்பிலிருந்து வந்த இரு பெண் பயணிகளிடமிருந்து 5 பைகளிலிருந்து பசை வடிவில் மற்றும் கட்டிகள் வடிவில் மொத்தம் 837 கிராம் எடையுள்ள 24 கேரட் சுத்தத் தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதன் மூலம் மொத்தம் 3.14 கிலோ கிராம் எடைகொண்ட 24 கேரட் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 1.59 கோடி ரூபாயாகும். இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.