3 ஆண்டு இழுத்தடிப்புக்கு பின் ஆளுநர் ஒப்புதல் அழகப்பா பல்கலைக்கழகத்தில் 22ம் தேதி பட்டமளிப்பு விழா: தினகரன் நாளிதழுக்கு மாணவர்கள் நன்றி

காரைக்குடி: மூன்று ஆண்டுகளாக ஆளுநர் ஒப்புதல் வழங்காததால் இழுத்தடிக்கப்பட்ட காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா வரும் 22ம் தேதி நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த 49 கல்லூரிகள் இணைப்புக்கல்லூரிகளாக  உள்ளன. தவிர, பல்கலைக்கழகத்தில் 30க்கும் மேற்பட்ட  துறைகள், தொலைநிலைக்கல்வி வாயிலாக பல்வேறு பாடப்பிரிவுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இணைப்பு கல்லூரிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், பல்கலை. துறைகளில் 3,000க்கும் மேற்பட்டவர்கள், தொலைநிலைக்கல்வி வாயிலாக 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.

கல்லூரிகளில் படித்து முடித்து தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பட்டமளிப்பு விழா நடத்தி சான்றிதழ் வழங்கப்படும். பல்கலைக்கழக வேந்தரான கவர்னர் தலைமை வகித்து  பட்டங்களை வழங்குவார். இப்பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகத்தில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, கடந்த 2019 முதல் 2022 வரை 3 ஆண்டுகளாக பட்டம் வழங்காமல் கிடப்பில் போடப்பட்டு இருந்தது. ஆளுநர் கடந்த 3 ஆண்டுகளாக ஒப்புதல் வழங்காததால் மாணவர்கள் பரிதவிப்புக்கு ஆளாயினர்.

 இச்சூழலில் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தராக பொறுப்பேற்ற ஜி.ரவி, உடனடியாக பட்டமளிப்பு விழா நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதன்படி 3 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 22ம் தேதி காலை 10.30 மணிக்கு பட்டமளிப்பு விழா நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்க உள்ளார். முதன்மை விருந்தினராக ஒன்றிய கல்வி மற்றும் திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தவுள்ளார். தமிழ்நாடு அரசு உயர்கல்வித்துறை அமைச்சர், பல்கலைக்கழக இணை வேந்தர்  க.பொன்முடி கலந்து கொள்கிறார். இது குறித்து இந்தப் பல்கலைக்கழக கல்வியாளர்கள், மாணவர்கள் கூறுகையில், ‘‘கடந்த 3 ஆண்டுகளாக பட்டமளிப்பு  விழா நடைபெறாததால் மாணவர்கள் பட்டங்கள் பெற முடியாமல் அவதிக்குள்ளாயினர். எங்கள் பிரச்னைகள் குறித்து தினகரன் நாளிதழ் கடந்த 7ம் தேதி விரிவாக செய்தி வெளியிட்டிருந்தது. 3 ஆண்டுகள் இழுத்தடிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த தினகரன் நாளிதழுக்கு நன்றி’’ என்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.