சென்னை: அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக முதல்கட்டமாக கூலிப்படை தலைவன் உட்பட 4 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.
அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியும், திருச்சியைச் சேர்ந்த தொழில் அதிபருமான ராமஜெயம் 2012 மார்ச் 29-ம் தேதி நடைபயிற்சி சென்றபோது கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கு தொடர்பாக திருச்சி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது.
ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகள் குறித்த எந்தவித துப்பும் கிடைக்காததால், வழக்கு சிபிஐவிசாரணைக்கு மாற்றப்பட்டது. 10 ஆண்டுகளாக பல கட்ட விசாரணைகள் நடந்தும், கொலைக்கான மர்மமுடிச்சு அவிழவில்லை. இதையடுத்து,மாநில போலீஸாரே வழக்கை விசாரிக்க உத்தரவிடக் கோரி ராமஜெயத்தின் சகோதரர் ரவிச்சந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தற்போதைய சிபிசிஐடி எஸ்பி ஜெயக்குமார் தலைமையில், டிஎஸ்பி மதன், சென்னை சிபிஐயைச் சேர்ந்த ரவி உள்ளிட்டோர் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்தது.
இந்நிலையில், ராமஜெயத்தை கொலை செய்தவர்கள் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று சிபிசிஐடி போலீஸார் அறிவித்தனர்.
ராமஜெயம் கொலை வழக்கில் 100-க்கும் மேற்பட்டவர்களிடம் சிபிசிஐடி போலீஸார் அடுத்தடுத்து விசாரணை நடத்தினர். இதில் 12 பேர் சந்தேக நபர்கள் பட்டியலில் வைக்கப்பட்டனர். அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கு திருச்சி மாஜிஸ்திரேட்டிடம் சிபிசிஐடி போலீஸார் அனுமதி பெற்றனர்.
இதைத்தொடர்ந்து, சென்னை மயிலாப்பூரில் உள்ள தடய அறிவியல் துறை அலுவலகத்தில் நேற்று இந்த சோதனை தொடங்கியது.
சந்தேக நபர்கள் பட்டியலில் இடம்பெற்ற திண்டுக்கல் மோகன்ராம் (44), அதே மாவட்டத்தைச் சேர்ந்தநரைமுடி கணேசன் (49), தினேஷ்குமார் (38), மயிலாடுதுறை சத்யராஜ்(40) ஆகிய 4 பேர் உண்மை கண்டறியும் சோதனைக்கு நேற்று ஆஜராகினர். அவர்களிடம் டெல்லியில் இருந்து வந்த மத்திய தடயவியல் துறையைச் சேர்ந்த 2 நிபுணர்கள் இந்த சோதனையை மேற்கொண்டனர்.
ராமஜெயம் கொலை தொடர்பாக அவர்களிடம் தலா 12 கேள்விகள் எழுப்பப்பட்டன. சோதனை விவரம்அனைத்தும் ‘வீடியோ’ பதிவு செய்யப்பட்டது. விசாரணையின்போது எஸ்பி ஜெயக்குமார் உடனிருந்தார். அதேபோன்று சந்தேக நபர்கள் 4 பேருடைய வழக்கறிஞர்களும் உடன் அனுமதிக்கப்பட்டனர். நேற்று காலை 10 மணிக்குதொடங்கிய விசாரணை மாலை 5.30 மணி வரை நீடித்தது. அனைவரிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த விசாரணை முடிவின் அடிப்படையில் இவர்கள் ராமஜெயம்கொலை வழக்கில் தொடர்புடையவர்களா? என்பது குறித்து தெரிய வரும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். உண்மை கண்டறியும் சோதனை குறித்து, 4 பேருடன் வந்த வழக்கறிஞர் புகழேந்தி கூறியதாவது:
ராமஜெயம் கொலை தொடர்பான குறிப்பிட்ட சில கேள்விகள் மற்றும் பொதுவான கேள்விகள் என 12 கேள்விகளை மாற்றி மாற்றி கேட்டனர். ஒரு கேள்விக்கும் அடுத்த கேள்விக்கும் 20 விநாடி இடைவெளி விட்டனர். அதற்கு பின்னர் 5 நிமிட இடைவெளிக்கு பின்னர் இதே 12 கேள்விகளை மாற்றி மாற்றி மீண்டும் கேட்டனர். நாளை மேலும் 4 பேரிடம் இந்த சோதனையை நடத்த உள்ளதாக தெரிவித்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.