புதுடெல்லி: பாஜக செயற்குழுக் கூட்டம் 2 நாட்கள் நடைபெற்றது. கடந்த செவ்வாய்க்கிழமை கடைசி நாளன்று பிரதமர் மோடி நிறைவுரையாற்றினார். அப்போது, 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில், கட்சியை எப்படி பலப்படுத்த வேண்டும் என்று பாஜக மூத்த நிர்வாகிகளுக்கு அவர் எடுத்துரைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
முஸ்லிம்கள் உட்பட சிறுபான் மையினரிடத்தில் கட்சியை கொண்டு சேர்க்க வேண்டும். அவர்களிடம் இருந்து பிரதிபலனாக வாக்குகளை எதிர்பார்க்காமல், அவர்களின் பிரச்சினைகளை போக்க சேவை செய்ய வேண்டும். அனைத்து மதத்தவர்களையும் சந்திக்க வேண்டும். பல்கலைக்கழகங்கள், சர்ச்சுகளுக்கு கட்சி நிர்வாகிகள் சென்று அங்குள்ளவர்களை சந்திக்க வேண்டும். முஸ்லிம் அறிஞர்களை சந்தித்து கட்சியின் செயல்பாடுகள் பற்றி எடுத்துரைக்க வேண்டும். அதற்காக அவர்களிடம் இருந்து வாக்குகளை எதிர்பார்க்க கூடாது. எந்த சமூகத்தினரைப் பற்றியும் பாஜக.வினர் விமர்சனம் செய்ய கூடாது.
இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதற்கு இதுதான் சரியான நேரம். இதற்கு அனைத்து மாநிலங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மாநிலங்களுக்குள் ஒன்றிணைந்து செயல்படுதல், மத்திய அரசுடன் இணைந்து செயல்படுதல் போன்றவற்றால் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற முடியும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.