'மல்யுத்த சம்மேளன தலைவரை நீக்கும் வரை எங்களது போராட்டம் ஓயாது' – மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா

புதுடெல்லி,

ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கம் பெற்றுத்தரும் விளையாட்டுகளில் ஒன்றாக மல்யுத்தம் விளங்குகிறது. இதுவரை ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்தியா 7 பதக்கங்களை வென்று இருக்கிறது. இதனால் இந்தியாவில் இப்போது கவனிக்கத்தக்க விளையாட்டுகளில் ஒன்றாக மல்யுத்தம் இருக்கிறது.

இந்த நிலையில் நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் 30 பேர் நேற்று திடீரென போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் ரோட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களான பஜ்ரங் பூனியா, சாக்ஷி மாலிக், காமன்வெல்த் விளையாட்டு சாம்பியன் வினேஷ் போகத், சரிதா மோர், சங்கீதா போகத், அன்ஷூமாலிக், சத்யவார்த் மாலிக், ஜிதேந்தர் கின்ஹா, அமித் தன்கர், சுமித் மாலிக் ஆகியோரும் அடங்குவர்.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக 2011-ம் ஆண்டில் இருந்து 66 வயதான பிரிஜ் பூஷன் ஷரண் சிங் இருந்து வருகிறார். இவர் பாரதீய ஜனதா கட்சி எம்.பி.யும் ஆவார். நீண்ட காலம் அந்த பொறுப்பில் இருக்கும் அவர் சர்வாதிகார போக்குடன் நடந்து கொள்கிறார், மல்யுத்த வீராங்கனைகளிடம் தவறாக நடந்து கொள்கிறார். அவரை பதவியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதே மல்யுத்த வீரர்களின் கோரிக்கையாகும்.

இது குறித்து மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா கூறுகையில், ‘எங்களது போராட்டம் மத்திய அரசுக்கோ அல்லது தேசிய விளையாட்டு ஆணையத்துக்கோ எதிரானது அல்ல. இது தேசிய மல்யுத்த சம்மேளனத்துக்கு எதிரான யுத்தம். மல்யுத்த சம்மேளன தலைவரை நீக்கும் வரை எங்களது போராட்டம் ஓயாது. அதுவரை எந்தவித சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்கமாட்டோம். இந்திய மல்யுத்தத்தை காப்பாற்றவே இந்த போராட்டம். எங்களுக்கு உதவுவதற்கு வெளிநாட்டு பயிற்சியாளரை நியமிக்க மறுத்த அவர் தனது சொந்த அகாடமிக்கு வெளிநாட்டு பயிற்சியாளரை நியமித்துள்ளார்’ என்று குறிப்பிட்டார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.