இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டா வளாகத்தில் கடந்த 10 நாட்களில் இரண்டு தொழில் பாதுகாப்புத்துறை காவலர்கள் (CISF) உட்பட மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இரு மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) வீரர்கள் மற்றும் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மூன்றாவது நபர், இறந்த பணியாளர்களில் ஒருவரின் மனைவி என்று கூறப்படுகிறது.
கடந்த திங்கட்கிழமை, பிசிஎம்சி ரேடார் மையத்தில் பணிபுரிந்த சத்தீஸ்கரைச் சேர்ந்த சிந்தாமணி (29) என்ற சிஐஎஸ்எஃப் பணியாளர் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் தற்கொலை செய்து கொண்டார். மற்றொருபக்கம் பீகாரைச் சேர்ந்த சிஐஎஸ்எஃப் சப்-இன்ஸ்பெக்டரான விகாஸ் சிங், சர்வீஸ் ஆயுதத்தால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார். தொடர்ச்சியாக இரண்டு தொழில் பிரிவு காவல் துறையினர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், விகாஸ் சிங்கின் மனைவி பிரியா சிங் நர்மதா, விருந்தினர் மாளிகையில் (ஜனவரி 17) நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இவர்களின் தற்கொலைக்கான காரணங்கள் தற்போது வரை தெளிவாக தெரியவில்லை. இதுகுறித்து ஸ்ரீஹரிகோட்டா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இஸ்ரோ வளாகத்தில் கடந்த 10 நாட்களில் மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. மரணித்த தொழிற்பிரிவு காவலர்கள் கடந்த இரண்டு மாதங்களில் யார் யாரோடு தொடர்பில் இருந்தார்கள் என்கிற விபரத்தை ஆந்திர பிரதேச காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவையாற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை – 600 028.
தொலைபேசி எண் – (+91 44 2464 0050, +91 44 2464 0060)
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM