பாரீஸ்,
உலகின் வயதான பெண்ணாக அறியப்பட்டு வந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி லூசில் ராண்டன் மரணமடைந்தார். அவருக்கு வயது 118. லூசிலின் மறைவை அவர் தங்கியிருந்த முதியோர் இல்லத்தின் செய்தி தொடர்பாளர் டேவிட் டவெலா உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்ட அறிக்கையில், “லூசில் ராண்டனின் மறைவு நிச்சயமாக பெருந்துயர் தான். ஆனால் அவர் இயற்கை எய்தவே விரும்பினார். மரணத்தின் மூலம் தனது சகோதரருடன் சேர வேண்டும் என்று விரும்பினார். லூசிலுக்கு நிச்சயமாக இது விடுதலை தான்” என்றார்.
முதியோர் இல்லத்தில்…
1904-ம் ஆண்டு பிப்ரவரி 11-ந் தேதி பிரான்ஸ் நாட்டின் தென் பகுதியில் பிறந்தவர் லூசில் ராண்டன். தனது இளமை பருவத்தில் ஆசிரியையாக பணியாற்றிய லூசில் தனது 40 வயதில் கன்னியாஸ்திரி ஆனார். அதன் பிறகு இவரை அனைவரும் சிஸ்டர் ஆண்ட்ரே என்று அழைத்து வந்தனர்.
தன்னுடைய 75 வயதில் ஓய்வு பெற்ற லூசில் பல்வேறு முதியோர் இல்லங்களில் தனது வாழ்வை கழித்து வந்தார். கடைசியாக 2009-ம் ஆண்டு தெற்கு பிரான்சின் டூலோன் நகரில் இருக்கும் முதியோர் இல்லத்துக்கு சென்றார்.
ஸ்பானிஷ் காய்ச்சல்
ஐரோப்பாவில் வாழும் மிகவும் வயதான பெண்ணாக அறியப்பட்டு வந்த லூசில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 119 வயதான ஜப்பானின் கேன் டனாகா மறைவுக்கு பின் உலகின் வயதான பெண்ணாக மாறினார்.
லூசில் தன் வாழ்நாளில் 2 உலகப் போர்களை சந்தித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டும் இன்றி இரு பெருந்தொற்றுக்களையும் சந்தித்தவர் லூசில். 1918-ம் ஆண்டு ஸ்பானிஷ் காய்ச்சல் பாதிப்புக்கு ஆளான லூசில் அதில் இருந்து மீண்டு தனது ஆயுளை காப்பாற்றிக் கொண்டார்.
கொரோனாவை வீழ்த்தி சாதனை
கடந்த ஆண்டு தனது 117-வது பிறந்தநாளை கொண்டாடுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு லூசில் கொரோனா தொற்றுக்கு ஆளானார். லூசில் இருந்த முதியோர் இல்லத்தில் 10 பேர் கொரோனா தொற்றுக்கு பலியான நிலையில் லூசில் கொரோனாவை வீழ்த்தி, கொரோனாவில் உயிர் பிழைத்த உலகின் வயதான பெண்மணி என்ற சாதனையையும் படைத்தார்.
இந்த நிலையில்தான் நேற்று முன்தினம் இரவு அவரது உயிர் தூக்கத்திலேயே பிரிந்துள்ளது. லூசில் மறைவுக்கு பிரான்ஸ் மக்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.