டெல்லி குடியரசு தின விழாவில் 50 போர் விமானங்கள் பங்கேற்பு: பொதுமக்களுக்கு 32 ஆயிரம் டிக்கெட் விற்பனை

புதுடெல்லி,

டெல்லியில் 26-ந் தேதி நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் 50 போர் விமானங்கள் பங்கேற்கின்றன. எகிப்து படைப்பிரிவும் அணிவகுப்பில் கலந்து கொள்கிறது. பொதுமக்களுக்கு 32 ஆயிரம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகின்றன.

குடியரசு தின விழா

நமது நாட்டில் அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்த ஜனவரி 26-ந் தேதி, ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு, கொரோனா தொற்றை கட்டுப்படுத்திய நிலையில் தலைநகர் டெல்லியில் குடியரசு தினவிழா கோலாகலமாக நடைபெறுகிறது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் பட்டா அல் சிசி கலந்து கொள்கிறார்.கடமை பாதை என்று இப்போது பெயர் சூட்டப்பட்டுள்ள ராஜபாதையில் கண்கவர் அணிவகுப்பு நடைபெறுகிறது.

50 விமானங்கள் பங்கேற்பு

அப்போது வானில் இந்தியாவின் 50 போர் விமானங்கள் அணிவகுத்து வீர சாகசங்களில் ஈடுபடும் என தெரிய வந்துள்ளது.

இதுபற்றி விமானப்படையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

குடியரசு தின விழாவில் 50 போர் விமானங்கள் பங்கேற்கின்றன. கடற்படையின் ஐஎல்-38 விமானம் முதல் முறையாக கலந்து கொள்கிறது. இதுவே கடைசி முறையாகவும் இருக்கக்கூடும்.

இந்த விமானம், இந்திய கடற்படையின் கடல்சார் உளவு விமானம் ஆகும். இது கடற்படையில் 42 ஆண்டுகாலம் சேவையாற்றி உள்ளது.

குடியரசு தின விழாவில் பங்கேற்கிற 50 விமானங்களில் 4 விமானங்கள் ராணுவத்துக்கு உரியவை ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

டெல்லியில் நிருபர்களிடம் இந்தத் தகவல்களை அவர் வெளியிட்டபோது, இந்திய விமானப்படை சார்பில் குடியரசு தின விழா அணிவகுப்பில் இடம்பெறுகிற அலங்கார ஊர்தியின் மாதிரியும் திறந்து வைக்கப்பட்டது.

32 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை

முதல்முறையாக குடியரசு தின விழாவில் பங்கேற்க அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படுகிறவர்களுக்கு, அழைப்புகள் ஆன்லைன் வழியாக அனுப்பி வைக்கப்படுகின்றன.

கொரோனா பெருந்தொற்று காலத்துக்கு முன்பாக இந்த விழாவில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டதுண்டு. ஆனால் இப்போது அதில் வெட்டு விழுகிறது.

இந்த ஆண்டு 42 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக பொதுமக்களுக்கு 32 ஆயிரம் டிக்கெட்டுகள் ஆன்லைன் வழியாக விற்பனை செய்யப்படும் என்று ராணுவ அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு நல்ல வரவேற்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குடியரசு தின விழா அணிவகுப்பில் எகிப்து நாட்டின் படைப்பிரிவும் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.