கம்மம்: பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சியின் முதல் பொதுக்கூட்டம் தெலங்கானா மாநிலம், கம்மம் பகுதியில் நேற்று நடந்தது. இதில், தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமை வகிக்க, கேரள முதல்வர் பினராய் விஜயன், டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவத் மான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் உட்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஹைதராபாத் வந்த இந்த தலைவர்கள் அனைவரையும் முதல்வர் சந்திரசேகர ராவ் அவரது வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்து உபசரித்தார். அதன் பின்னர் அனைவரும் யாதகிரி குட்டா லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு சென்று சுவாமியை வழிபட்டனர். அதன் பின்னர் அனைவரும் கம்மம் மாவட்ட ஆட்சியர் அலுவலக திறப்பு விழாவில் கலந்துகொண்டனர். பொதுக் கூட்டத்தில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பேசியதாவது: இந்த கம்மம் பொதுக்கூட்டம், நாட்டின் அரசியல் மாற்றத்திற்கு ஒரு பிள்ளையார் சுழியாக அமையும். நாட்டில் 70 ஆயிரம் டிஎம்சி தண்ணீர் நமக்கு உபயோகத்திற்கு இருந்தாலும், அதில் வெறும் 20 ஆயிரம் டிஎம்சி மட்டுமே உபயோகிக்கிறோம். சென்னை நகரம் தண்ணீருக்காக பல போராட்டங்கள் செய்துள்ளது.
சீனாவில் உள்ளது போல் மிகப்பெரிய அணைக்கட்டு நம் நாட்டில் உள்ளதா? தண்ணீருக்காக மாநிலங்களுக்கிடையே ஒரு வித பனிப்போர் நிலவுகிறது.
நம் நாட்டில் 4.10 லட்சம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் போது, அதில் நாம் 2.10 லட்சம் மெகாவாட் மின்சாரத்தையே உபயோகித்து கொள்கிறோம். ஆனால்மின்சாரம் கிடைக்காமல் விவசாயம்செய்ய வழியின்றி பல விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதற்கெல்லாம் காங்கிரஸும், பாஜகவுமே காரணம். இதனை மாற்றி அமைக்க பிஆர்எஸ்கட்சி உதயமாகி உள்ளது. மத்தியில் பிஆர்எஸ் ஆட்சி அமைந்தால், நாடு முழுவதும் விவசாயத்திற்கு இலவச மின்சாரம், இலவச சுத்தமான குடிநீர் வழங்கப்படும்.
எல்.ஐ.சி, ரயில்வே போன்ற பொதுத் துறைகள் தனியார் மயமாக்கப்படாது. அக்னிபத் திட்டம் ரத்து செய்யப்படும். தெலங்கானா மாநிலத்தில் வெற்றி கரமாக செயல்பட்டு வரும் பல திட்டங்கள் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும். மொத்தத்தில் 2024-ல் பாஜக வீட்டிற்கு, பிஆர்எஸ் நாட்டுக்கு. இவ்வாறு கே. சந்திரசேகர ராவ் பேசினார்.
கேரள முதல்வர் பிணராய் விஜயன் பேசும்போது ‘‘மத்திய அரசை எதிர்த்து போராட சந்திரசேகர ராவ் முடிவெடுத்துள்ளார். இதற்கு நான் எனது ஆதரவை முழுவதுமாக தெரிவிக்கிறேன்’’ என்று தெரிவித்தார்.