நியூயார்க்: பாகிஸ்தானுடன் தொடர்புடைய சுமார் 150 தீவிரவாத அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் ஐ.நா.கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் துணைத் தலைவர் அப்துல் ரகுமான் மக்கி, கடந்த திங்கட்கிழமை ஐ.நா.வின் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அல்-காய்தா தடைகள் குழுவின் கீழ் அப்துல் ரகுமான் மக்கி, சர்வதேச பயங்கரவாதியாக பட்டியலிடப்பட்டார். அவருக்கு எதிராக சொத்துகள் முடக்கம், பயணத் தடை உள்ளிட்ட நடவடிக் கைகளை உலக நாடுகள் எடுக்க இத்தடை வகை செய்கிறது.
ஐ.நா.வால் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள சுமார் 150 பயங்கரவாத அமைப்புகள் மற்றும் தனிநபர்கள், பாகிஸ்தானுடன் தொடர்புடையவர்கள் மற்றும் அந்த நாட்டிலிருந்து செயல்படுபவர்கள் ஆவர். லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் தலை வரும், மும்பை தீவிரவாத தாக்கு தலின் மூளையுமான ஹபீஸ் சயீத், லஷ்கர் இ தொய்பா உயர்மட்ட தளபதியும், 26/11 மும்பை தீவிரவாத தாக்குதலின் முக்கிய சதிகாரருமான ஜாகி-உர் ரஹ்மான், ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாத அமைப்பின் நிறுவனர் மசூத் அசார், பாகிஸ்தான் முகவரி கொண்டவரும் தப்பியோடிய நிழல் உலக தாதாவுமான தாவூத் இப்ராஹிம் உள்ளிட்டோர் இந்தக் கறுப்பு பட்டியலில் உள்ளனர்.
கடந்த ஆண்டு, தீவிரவாத எதிர்ப்பு கமிட்டி மாநாட்டில், “தீவிரவாதத்தின் மையமாக விளங்கும் பாகிஸ்தான், ஐநாவின் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட 150-க்கும் மேற்பட்ட தீவிரவாத அமைப்புகள் மற்றும் தனிநபர்களை வளர்த்து வருகிறது” என்று இந்தியா குற்றம் சாட்டியது.
லஷ்கர் துணைத் தலைவர் அப்துல் ரகுமான் மக்கியை கறுப்பு பட்டியலில் சேர்க்க இந்தியாவும் அமெரிக்காவும் ஐ.நா. பாதுகாப்பு கவுல்சிலில் தீர்மானம் கொண்டுவந்தன. ஆனால் சீனா தனக்குரிய சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி இதற்கு முட்டுக்கட்டை போட்டது. இந்நிலையில் கடும் எதிர்ப்பு காரணமாக சீனா பின்வங்கியதை தொடர்ந்து ஐ.நா.வின் கறுப்பு பட்டியலில் அப்துல் ரகுமான் மக்கி சேர்க்கப்பட்டுள்ளார்.