INDvNZ: `ஆட்ட நாயகன்' கில்; பயம் கிளப்பிய ப்ரேஸ்வெல்; திரில் வெற்றி பெற்ற இந்தியா!

இந்தியா – நியூசிலாந்து இடையேயான மூன்று போட்டிகள் உடையத் தொடரின், முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி நேற்று ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்றது. பேட்டிங்கில் இரு அணி வீரர்களும் வானவேடிக்கை காட்டினர். சுப்மன் கில்லின் இரட்டைசதம்.. பிரேஸ்வெல்லின் சதம், சிராஜ் சிறப்பான பௌலிங் என ஆட்டம் முழுவதும் பரபரப்பாக பைசா வசூல் போட்டியாக அரங்கேறியிருந்தது. இறுதியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வென்றது.

Rohit & Gill |INDvNZ

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்கவீரர்களாக ரோஹித் – சுப்மன் கில் இணை களமிறங்கியது. 6 ஓவர் முடிவில் இந்திய அணி 35/0 என ஸ்கோர் செய்ய, பிறகு சுப்மன் கில் தனது ஆட்டத்தை ஆரம்பித்தார். கணிசமான அளவு பவுண்டரிகள் இருவரிடமிருந்தும் வர 12 ஓவர் முடிவில் இந்திய அணி 60/0 என்ற நிலையில் இருந்தது. 13வது ஓவரை பிளேயர் டிக்னர் வீச வந்தார். முதல் பந்தை எதிர்க்கொண்ட ரோஹித் தூக்கி அடிக்க முயல, அதை நேராக டேரில் மிட்செல் கேட்ச் பிடிக்க, 34 ரன்களுடன் வெளியேறினார், ரோஹித். பிறகு, ஆட்டம் சூடுபிடிப்பதற்குள்ளாகவே, 16 வது ஓவரில் மிட்செல் சாண்ட்னரின் 2வது பந்தில் போஸ்ட் ஆகினார், கோலி. 8 ரன்கள் எடுத்தநிலையில் சாண்ட்னரின் சிறப்பான சுழல் பந்தை கணிக்க தவறி, வெளியேறினார் கோலி. இஷான் கிஷன் களமிறங்கினர். இப்படி 16 ஓவர் முடிவில் இந்தியா 91/2 என இந்தியா ஸ்கோர் இருந்தது. 19வது ஒவரின் 5வது பந்தில் கில் தனது சிக்ஸர் மூலம் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். 20 வது ஒவரில் கிஷனும் வெளியேறினார். 20 ஓவர் முடிவில் இந்தியா 114/3 என ஸ்கோர் செய்தது. பிறகு, கில் – சூர்யகுமார் ஆட்டத்தை சரியான விதத்தில் எடுத்துச்செல்ல, ரன்னும் சரியான விகிதத்தில் உயர்ந்தது.

அவ்வப்போது பவுண்டரிகளும் கணிசமாக வந்தன. இருவரிடமும் நல்ல ஓட்டமும், சுழற்சியும் இருந்தது. 29 வது ஒவரில் சூர்யகுமாரும் தனது விக்கெட்டை இழந்து, 31 ரன்களுக்கு வெளியேறினார் . 28.3 ஓவர் முடிவில் இந்தியா 175/4 என்ற நிலையில் இருந்தது. ஆனால்,

சுப்மன் கில் “தனிப்பாதை, தனி ஆட்டம்” என கெத்துக்காட்டிக் கொண்டிருந்தார் . 30 வது ஒவரின் 3வது பந்தில் தனது சதத்தையும் பூர்த்திச் செய்தார் (14 பவுண்டரி / 2 சிக்ஸர்).

Gill

ஹர்திக் ஆட்டத்தில் சற்று தடுமாற்றம் இருந்தது. ஆனால், மறுமுனையில் இருக்கும் கில்லுடன் ஆட்டத்தை நன்கு சுழற்ற, சுப்மனும் அதை நன்கு பயன்படுத்திக் கொண்டு ரன்களைக் குவித்துக் கொண்டு இருந்தார் . 33 வது ஓவரின் 4வது பந்தில் கில்லின் பவுண்டரியுடன் 201/4 என இந்தியா ஸ்கோர் உயர, மறுபுறம் 19 இன்னிஸில் ஒருநாள் போட்டியில் 1000 ரன்களை கடந்து சுப்மன் கில் மற்றொரு சாதனை செய்தார். 40 வது ஒவரில் 4வது பந்தில், சற்று குழப்பான சூழலில் ஹர்திக் மூன்றாம் நடுவரால் போல்ட் முறையில் “அவுட்” என அறிவிக்கப்பட்டார். ஆனால், ஸ்டம்ப்பில் பந்து பட்டதா? இல்லை கீப்பர் கைப்பட்டு பெய்ல்ஸ் கலைந்ததா? என பார்த்தால், சற்று தெளிவான முடிவாகத் தோன்றவில்லை என்பது நிதர்சனம் . 43வது ஓவரில் தனது சிக்ஸர் மூலம் 150 ரன்களை கடந்தார் கில் (இருமுறை கில் கேட்ச் தவறவிடப்பட்டது, அப்போதே பிடித்திருக்கலாம் !). 45 வது ஓவரின் கடைசிப்பந்தில் வாஷிங்டன் சுந்தர் விக்கெட் விட, அடுத்து வந்த தாக்கூர் தவறான தகவல்பரிமாற்றம் காரணமாக ரன் அவுட் ஆனார். கில் விக்கெட்டிற்காக, தன் விக்கெட்டை விட்டுக்கொடுத்து வெளியேறினார். பிறகு கில் – குல்தீப் இணைச் சேர, ரன் குவிப்பில் சிறு தோய்வு, கில்லும் சற்று சோர்வு அடைந்தார் .

Gill

49வது ஓவரில் ஃபெர்குசன் ஓவரின் தன், இரட்டை சதத்திற்கு தேவையான 18 ரன்களையும் தொடர்ந்து 3 சிக்ஸர்கள் மூலம் எட்டி தனது இரட்டை சதத்தை எட்டினார், சுப்மன் கில். இதில் 19 பவுண்டரி, 8 சிக்ஸர் அடங்கும். ருத்துராஜ், கிஷன், சூர்யகுமார் என நல்ல ஃபார்மில் இருக்க இவர் ஏன்? என்ற கேள்விக்கு தனது இரட்டை சதம் மூலம் பதிலடிக் கொடுத்துள்ளார், கில்.

பிறகு 50 ஒவரின் முதல் பந்தில் சிக்ஸர் விளாசினார், அடுத்த பந்திலேயே ஷிப்லி பந்தில் பிலிப்பின் அபாரமான கேட்ச்-மூலம் 208 ரன்களுக்கு வெளியேறினார் . இறுதியாக 50 ஓவர் முடிவில் இந்தியா 8 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்திற்கு 350 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆலன் – கான்வே களமிறங்கினர். தொடக்கத்தில் ஷமி – சிராஜ் பௌலிங் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை .ஆனால், 6 வது ஓவரில் தனது முழுதிறமையை காட்டிய சிராஜ், வழக்கம்போல் பவர்ப்ளேவில், தன் ஆதிக்கத்தை காட்டினார் . 6வது ஓவரின் நான்காவது பந்தில் கான்வே-விற்கு எதிர்பாராமல் இழுத்து போட்ட ஷாட் பால் அவருக்கு விக்கெட்டாக மாறியது . 6 ஒவர் முடிவில் 28/1 என ஸ்கோர் செய்தது, நியூசிலாந்து. அதன்பிறகு, இந்திய பௌலர்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர், ஷமி-யின் 7 வது ஓவர், சிராஜின் 8-வது ஓவர் இரண்டும் மெய்டின் ஒவராக, எட்டு ஓவர் முடிவிலும் ஸ்கோர் 28/1ஆகவே நிலைத்தது. பிறகு, நிதானமாக ஹென்றி நிக்கோல்ஸ் வேகம் ஏற்றினார்.

Siraj

ஹர்திக்கின் 11 வது ஓவரில் ஆலனும் பவுண்டரிகளும், சிக்ஸருமாய் நொறுக்க ஸ்கோர் மேல் ஏற, குல்தீப் அதற்கு தன் சுழலால் தடைப்போட்டார். ரன் வராத அழுத்தம் களத்தில் எதிரொலித்தது. 13வது ஓவரில் ஷர்துல் தாக்கூரின் பந்தில் ஃபின் ஆலன் ஆட்டமிழந்து 40 ரன்களுக்கு வெளியேறினார் . 13வது ஓவர் முடிவில் நியூசிலாந்து 70/2 என ஸ்கோர் இருக்க, குல்தீப் 14வது ஓவர் “மெய்டன்”. மீண்டும் ரன்தேக்கம். 15 ஓவர் முடிவில் 74/2 என நியூசிலாந்து நிலையிருந்தது. 16வது ஒவரை குல்தீப் வீசினர். ஒவரின் இரண்டாவது பந்தில் நிக்கோல்ஸ் பவுண்டரி அடிக்க, அடுத்தப் பந்தே தன் மாயச்சுழலில் மடக்கினார், குல்தீப், நிக்கோல்ஸை போல்ட் ஆக்கி வெளியேற்றினார், குல்தீப். 16 ஓவர் முடிவில் 79/3 என ஸ்கோர் செய்தது, நியூசிலாந்து.

சற்று அப்படி இப்படி என ரன்கள் வர மீண்டும், 18வது ஓவரை குல்தீப் வீசினார்.ஓவரின் நான்காவது பந்தில் டேரில் மிட்செல் விக்கெட்டை LBW-முறையில் வீழ்த்தினார். அதிகப்படியான டாட் பந்துகள், ரன்ரேட் அழுத்தம் என 25 வது ஓவரில் ஷமி பந்தில், பிலிப்ஸ் போல்ட் – ஆகி வெளியேறினார்.

ஆட்டம் நம் கையில் என இந்திய அணி எண்ணிய நிலையில் தான் களமிறங்கினார் மைக்கேல் ப்ரேஸ்வெல். முதலில் ப்ரேஸ்வெல் – லேதம் ஆட்டத்தை மெல்ல கொண்டு செல்ல பிறகு ஷமியின் 27 வது ஓவரில் ஆடத்தொடங்கிய ப்ரேஸ்வெல் புயலாக சுழன்றடிக்க தொடங்கினார்.

Bracewell

ரன்ரேட் குறைவது போல் தெரியும் போது, மீண்டும் 29வது ஓவர் சிராஜ், டாம் லேதமின் விக்கெட்டை வீழ்த்த, 24 ரன்களுடன் வெளியேற 7வது விக்கெட்டாக களமிறங்கினார், மிட்செல் சாண்ட்னர்- இன்றைய போட்டியில் பந்துவீச்சிலும் நல்ல பங்களிப்பை தந்திருந்தார். 7வது விக்கெட் ஜோடியாக ப்ரெஸ்வேல் – சான்டனர் இணை. 35 வது ஓவரில் இந்த இணை 50+ பார்ட்னர்ஷிப்பை செய்தது. சாண்ட்னரும் வந்த வாய்ப்பை எல்லாம் பயன்படுத்த, ப்ரேஸ்வேல் பவர்பேக் ஆன ஆட்டத்தைக் காட்டினார். ரன்களை மளமளவென உயர்த்தியது இந்த இணை. ப்ரேஸ்வெல் 43வது ஓவரில் தனது சிக்ஸருடன் 57 பந்திற்கு 103 ரன்கள் என தனது சதத்தை எட்டினார். 43 ஒவர் முடிவில் நியூசிலாந்து அணி 274/6 என ஸ்கோர் செய்தது. பிறகு, 44 வது ஓவரில் சாண்ட்னரும் அரைசதம் அடிக்க, அதோடு இந்த ஜோடியின் 150+ பார்ட்னர்ஷிப்பும் வந்தது. 44வது ஓவர் முடிவில் 285/6 என ஸ்கோர் இருந்தது. பிறகு, 46 வது ஓவரை சிராஜ் வீசி, அதில் சாண்ட்னர் விக்கெட்டை எடுத்து இந்த ஆபத்தான 162 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை முடிவுக்கு கொண்டு வந்தார், சிராஜ். ஆனால், அடுத்த பந்தில் ஷிப்லியை டக் அவுட் ஆக்கி, ஆட்டத்தை மீண்டும் இந்தியா பக்கம் திருப்பினார் சிராஜ். 46வது ஓவர் முடிவில் நியூசிலாந்து 294/8 என்று ஸ்கோர் செய்திருந்தது. சிராஜ் தன் 10 ஓவரில் 46 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டை வீழ்த்தியிருந்தார்.47-வது ஓவர், ஹர்த்திக்கின் ஒவரை ப்ரேஸ்வெல் பொளந்து கட்டினார். சிக்ஸரை சிதறடித்திக் கொண்டிருந்தார்.

Bracewell & Santner

சாண்ட்னரின் உறுதுணையோடு, ப்ரேஸ்வெல் போட்டியை நுனிஇருக்கை ஆட்டமாக மாற்றினார்.

48 ஓவர் முடிவில் 326/8 என ஸ்கோர் செய்தது, நியூசிலாந்த தற்போது 12 பந்தில் 24 ரன் என்ற நிலையில் போட்டித் தொடர்ந்தது தொடக்கமும் நன்றாக இருந்தது ஆனால், 49 வது ஓவரின் 3வது பந்தில் ஃபெர்குசன் விக்கெட்டை ஹர்திக் வீழ்த்த, நியூசிலாந்து 9 விக்கெட் இழந்த நிலையில் இருந்தது. இறுதி ஓவரில் 6 பந்துகளுக்கு 20 ரன்கள் தேவை. ஆனால், கையில் 1 விக்கெட்தான். கடைசி ஒவரை ஷர்துல் வீசினார் .

முதல் பந்தே சிக்ஸர்! அடுத்தது ஓர் ஓய்ட், ஆனால், அடுத்து ஷர்துலின் நல்ல யார்கரில் LBW முறையில் ப்ரேஸ்வெல் விக்கெட் விழ, 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

Bracewell & Gill

ஆனால், ஒற்றை ஆளாய் சாண்ட்னருடன் இணைந்து இந்த நிலைக்கு போட்டியை சுவாரஸ்மாக்கிய, ப்ரேஸ்வல்லுக்கு ஓர் ராயல் சல்யூட்! அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய போராட்டக்குணத்தை ப்ரேஸ்வெல் வெளிப்படுத்தியிருந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.