தெலங்கானாவில் ரூ.7 கோடி இன்சூரன்ஸ் பெற காருடன் எரிந்து மரணமடைந்து விட்டதாக நாடகமாடிய அரசு ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
தெலங்கானா மாநிலம், மேடக் மாவட்டத்தில் உள்ள வெங்கடாபுரத்தை சேர்ந்தவர் தர்மநாயக் (44). இவர் தெலுங்கானா மாநில செயலகத்தில் உதவிப் பிரிவு அலுவலகராக பணியாற்றி வருகிறார். இவரது கார் இம்மாதம் 8ஆம் தேதி வெங்கடாபுரம் கிராமத்துக்கு வெளியே ஒரு பள்ளத்தாக்கில் ஒரு ஆண் சடலத்துடன் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து அதேக்மால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அடையாளம் தெரியாத அளவுக்கு அந்த ஆணின் சடலம் தீயில் கருகியிருந்த நிலையில், விசாரணைக்குப் பின் சடலமாக கிடந்தது தனது கணவர் தர்மநாயக்கின் சடலம்தான் என அவரது மனைவி தெரிவித்தததைத் தொடர்ந்து, சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே தர்மநாயக்கின் இறப்பில் சந்தேகம் இருப்பது விசாரணையில் தெரியவந்ததைத் தொடர்ந்து, அவரது மனைவியின் நடவடிக்கையை போலீசார் கண்காணித்து வந்தனர். அவரது செல்போன் உரையாடலையும் கண்காணித்தனர் .
இந்நிலையில், தர்மநாயக் இறப்பதற்கு முன் கட்டிவந்த இன்சூரன்ஸ் பாலிசியை கிளைம் செய்யும் பொருட்டு, அவரது மனைவி சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு விண்ணப்பித்துள்ளார். கணவர் இறந்த சில நாட்களுக்குள் காப்பீடு கோரி விண்ணப்பித்தது போலீசாருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து தர்மநாயக் கட்டிய இன்சூரன்ஸ் விவரங்களை போலீசார் சேகரிக்கத் தொடங்கினர். அதன்படி தர்மநாயக் கடந்த ஓராண்டில் தனது பெயரில் ரூ.7.4 கோடி மதிப்புள்ள 20க்கும் மேற்பட்ட இன்சூரன்ஸ் பாலிசிகளை தவறாமல் கட்டிவந்தது தெரியவந்தது. மேலும் பங்குச் சந்தையில் தர்மநாயக் ரூ.85 லட்சத்தை இழந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தர்மநாயக்கின் மனைவியிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில், இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்காக விபத்தில் இறந்ததுபோல் நாடகம் ஆடியது அம்பலமானது.
இதையடுத்து, போலீசார் தலைமறைவாக இருந்த தர்மநாயக்கை கைது செய்தனர். காரில் இருந்த சடலம் யாருடையது என்று போலீசார் விசாரிக்கையில், அவரைப் போன்றிருக்கும் டிரைவர் ஒருவரை கண்டுபிடித்து அவருக்கு மொட்டை அடித்து, தன்னுடைய உடைகளை அணியச் சொல்லி, சம்பவ இடத்திற்கு வரவழைத்து கொலை செய்து எரித்தது விசாரணையில் தெரியவந்தது. பங்குச்சந்தையில் இழந்த பணத்தை காப்பீடு மூலமாக சம்பாதிப்பதற்கான சதித்திட்டத்தை தர்மநாயக் அரங்கேற்றியது வெளிச்சத்துக்கு வந்தது.
இதையடுத்து தர்மநாயக் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரையும், உடந்தையாக இருந்த அவரது மனைவியையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்சூரன்ஸ்க்காக அரங்கேறிய இந்த பயங்கர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM