“மகாகவி பாரதியார் அவர்களால் போற்றப்பட்டும், பேரறிஞர் அண்ணா அவர்களால் தமிழ்நாடு என்று சூட்டப்பட்ட பெயரை பற்றி பேசினால் பிரிவினைவாதி என்று கூறுவது ஏற்புடையதல்ல” என்று கிருஷ்ணகிரியில் அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை பேச்சு
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் பர்கூர் பேருந்து நிலையம் அருகே அதிமுக நிறுவன தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆர் அவர்களின் 106 ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் முன்னாள் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரன் தலைமை வகித்தார். இதில் அதிமுக கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற துணை சபாநாயகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தம்பிதுரை பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய தம்பிதுரை, “இன்றைக்கு ஈரோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் எப்படி திண்டுக்கல் இடைத்தேர்தல் அதிமுகவிற்கு திருப்புமுனை ஏற்படுத்தியதோ, அதேபோல் ஈரோடு சட்டப்பேரவை இடைத்தேர்தல் மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும், அதிமுக இந்த இடைத்தேர்தலில் பழனிசாமி தலைமையில் மகத்தான வெற்றி பெறும். அது மட்டுமின்றி நாடாளுமன்ற தேர்தலுடன் ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற தேர்தல் உடன் சட்டமன்றத் தேர்தலும் வர உள்ளது. இதிலும் அதிமுக அமோக வெற்றி பெற இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமியின் கரங்களை வலுப்படுத்த வேண்டும்.
தமிழ்நாடு அரசின் பனிரெண்டாம் வகுப்பு பொது தமிழ் பாடப் புத்தகத்தில் 1915 ஆம் ஆண்டு மகாகவி பாரதியார் எழுதிய சொற்கள் இடம் பெற்றுள்ளது. அதில் `தமிழ்நாடு என குறிப்பிடுங்கள்’ என அப்போதே பாரதியார் குறிப்பிட்டுள்ளார். திராவிட இயக்கத்தை உருவாக்கிய பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது சட்டமன்றத்தில் தீர்மானம் ஏற்றப்பட்டு மத்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, சட்ட பூர்வமாக தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது. இதற்காகத்தான் ஒவ்வொரு தமிழனும் பாடுபட்டனர். இதை எல்லாம் சொன்னால் பாஜகவினர் பிரிவினைவாதி என்று சொல்லாமா? இப்படி ஒரு கருத்தை பரப்பலாமா? சிந்தித்து பாருங்கள்.
தமிழ்நாட்டை பொறுத்த வரையில் மொழி உணர்வு உள்ளவர்கள், கலாசாரத்தை பேணி கார்ப்பவர்கள் தான் இங்கு உண்டு. அதற்காக தான் திராவிட இயக்கம் உருவானது. உணர்வு மிக்க பகுதி தமிழ்நாடு அந்த இன உணர்வோடு உள்ள இயக்கத்தை பார்த்து குறை சொன்னால் மனம் வேதனை அடைகிறது.
திமுக அரசு பொறுப்பேற்று 20 மாதங்கள் ஆன நிலையில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்களை இந்த அரசு முடக்கியுள்ளது. அதிமுக வாரிசு அரசியலுக்கு எதிராக துவங்கப்பட்ட இயக்கம். இன்று திமுகவில் வாரிசு அரசியல் நிலவுகிறது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் குடும்பம் தொடர்ந்து வாரிசு அரசியலில் செய்து வருகிறது. எனவே வருகின்ற நாடாளுமன்ற சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கு தக்க பாடம் புகட்டும் வகையில் வாக்களித்து அதிமுகவை வெற்றி பெற செய்ய வேண்டும்” என பேசினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM