செங்கல்பட்டு சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 6 வார்டன்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சிறுவனின் தாயை கடத்திச்சென்று அடைத்து வைத்து புகாரை வாபஸ் வாங்கச்சொல்லி மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் கன்னடபாளையம் குப்பைமேடு பகுதியை சேர்ந்தவர் ப்ரியா. கணவனை இழந்த இவருக்கு 6 குழந்தைகள் உள்ளனர்.இதில் 17 வயது மூத்த மகனை, தாம்பரம் ரயில்வே போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்து கடந்த மாதம் 29ஆம்தேதி இரவு செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் 31ஆம்தேதி மாலை 4மணியளவில் சிறுவனுக்கு வாந்தி பேதியாகி வலிப்பு ஏற்பட்டதாக கூறி அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு வார்டன்கள் கொண்டு சென்ற போது ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். மாலையில் பூரியும், மோரும் சாப்பிட்டதால் சிறுவன் இறந்துவிட்டதாக கூறி சமாளித்தனர்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் தாய் ப்ரியா, தன் மகனின் சாவில் மர்மம் இருப்பதாகவும் எனக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் அழுததால் பரபரப்பு ஏற்பட்டது
இதையடுத்து பிணகூறாய்வின் அடிப்படையில் அவர் அடித்து கொலை செய்தது உறுதி செய்யப்பட்டதால் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியின் 6 வார்டன்கள் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து சிறுவனின் தாயாரை கடத்தி புகாரை திரும்ப பெறக்கோரி சிறுவர் சீர்திருத்த பள்ளியில்
பணியாற்றி வரும் சாஸ்திரி என்பவரது வீட்டில் வைத்தும் , சாந்தி என்பவரின் உறவினர் வீட்டில் வைத்தும் மிரட்டியதாக கூறப்படுகிறது.
கடந்த 2ஆம்தேதி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் என்பவரே நேரடியாக மிரட்டியதாகவும் குற்றஞ்சாட்டி உள்ள சிறுவனின் தாய் ப்ரியா, சமூக ஆர்வலர்கள் உதவியுடன், டி.எஸ்.பி பிரதாப்பை சந்தித்து புகார் அளித்தார்
தன்னை கடத்தி மிரட்டும் நபர்களை கைது செய்யாவிட்டால் சாட்சியங்களையும் தனது மகனை அடித்து கொன்றதற்கான ஆவணங்களையும் அழித்து விடுவார்கள் என்றும் ஏற்கனவே சிறுவர் சீர்திருத்த பள்ளி வார்டன்கள் 6பேரை கைது செய்த நிலையில் மீதமுள்ள சில குற்றவாளிகளையும் கைது செய்யவேண்டும் என்றும்,மேலும் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் பிரியா வேண்டுகோள் விடுத்துள்ளார்