நாமக்கல்: முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 11 நாட்களாக உச்சத்தில் நீடித்து வருகிறது. தமிழ்நாட்டின் முட்டை உற்பத்தி கேந்திரமாக விளங்கும் நாமக்கல் மண்டலத்தில் 1000-க்கும் மேற்பட்ட கோழி பண்ணைகள் உள்ளன. இங்கு நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளி நாடுகளுக்கும் நாமக்கல்லில் இருந்து முட்டைகள் அனுப்பப்படுகின்றன. கோழி பண்ணை வரலாற்றில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை கடந்த 8-ம் தேதி ரூ.5.65 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது.
கோழி பண்ணை வரலாற்றில் முதன்முறையாக புதிய உச்சத்தை தோட்ட முட்டை விலை கடந்த 11 நாட்களாக எந்தவித மாற்றமுமின்றி அதே விலையில் நீடிக்கிறது. நாமக்கல் பகுதிகளில் இருந்து தற்போது வெளிநாடுகளுக்கும் முட்டை ஏற்றுமதி அதிகரித்துள்ளது. வடமாநிலங்களில் குளிர் நிலவுவதால் அங்கு முட்டையின் நுகர்வும், விற்பனையும் அதிகரித்துள்ளது. இதனால் நாமக்கல் பகுதியில் இருந்து அதிகளவு அனுப்பப்பட்டு வருகிறது. அதே சமயம் பிற மண்டலங்களிலும் முட்டை விலை உயர்ந்து வருகிறது. இதுவே விலை உயர்வுக்கு காரணம் என்கின்றனர் பண்ணையாளர்கள். முட்டையின் விலை உச்சத்தில் நீடிப்பதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.