மதுரை விரகனூரில் வசித்து வந்த நடிகர் வடிவேலுவின் தாயார் வைத்தீஸ்வரி (எ) பாப்பா (87) நேற்று இரவு உடல்நல குறைவால் காலமானார். இந்த சம்பவம் வடிவேலு குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மதுரை விரகனூர் அருகே வடிவேலுவின் தாயார் சரோஜினி (87) வசித்து வந்தார். இவருக்கு உடல் நலக்குறைவு காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் நேற்று இரவு திடீரென உடல் குறைவு காரணமாக காலமானார். யாருக்கும் சிரமம் தராமல் பொங்கல் முடிந்தவுடன் எனது தாய் காலமாகி உள்ளதாக வடிவேல் கூறியுள்ளார்.
இது குறித்து நடிகர் வடிவேலு கூறும் போது, “எனது தாய் சரோஜினி நேற்று நள்ளிரவு திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக மறைந்திருக்கிறார். அவர் யாருக்கும் சிரமம் ஏற்படுத்தக் கூடாது என்று பொங்களை நல்லபடியாக கொண்டாடிவிட்டு தற்பொழுது மறைந்திருக்கிறார். மேலும், விக்கிப்பீடியாவில் தவறான தகவல் உள்ளது. எனவே அதனை அழித்து விடுங்கள்” என்றும் மிகுந்த சோகத்துடன் நடிகர் வடிவேலு தெரிவித்தார்.
நடிகர் வடிவேலு அவர்களின் தாயார் திருமதி. சரோஜினி அம்மாள் அவர்கள் மறைவையொட்டி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். “நடிகர் வடிவேலு அவர்களின் அன்புத்தாயார் திருமதி. சரோஜினி அம்மாள் என்கிற பாப்பா அவர்கள் மதுரை விரகனூரில் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். ஆளாக்கி அழகு பார்த்த அன்னையின் மறைவு என்பது எந்த ஒரு மகனுக்கும் ஈடுசெய்ய இயலாத இழப்பாகும். ‘வைகைப் புயல்’ திரு. வடிவேலு அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளனர். வடிவேலு அவர்களின் தாயார் சரோஜினி (87) மறைவிற்கு முக அழகிரி நேரில் அஞ்சலி செலுத்தினார்.