தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் பிரதமராக இருந்தபோது திறமையும் ஆளுமையும் நிறைந்த இளைஞர் தலைமுறையை உருவாக்குவதற்காக முன்னெடுத்த தொலைநோக்கு வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியே தேசிய இளைஞர் படையணி என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
தேசிய தலைவர்களை உருவாக்குவதற்கான தேசிய இளைஞர் படையணி முன்னெடுக்கும் வேலைத்திட்டம் பாராட்டுக்குரியது என்றும் பிரதமர் தெரிவித்தார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று முன்தினம்(17) நடைபெற்ற தேசிய இளைஞர் படையணியின் வருடாந்த கலை விழா மற்றும் பரிசளிப்பு விழா “பௌர்ஷாபிமான-2022” நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் தினேஷ் குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் தினேஷ் குணவர்தன,
தேசத்தின் எதிர்காலத்திற்காக இளைஞர் படையணி உருவாக்கப்பட்டு கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்கள் கடந்துவிட்டன. இளைஞர்களுக்கு இந்த வாய்ப்பைப் பெற்றுக்கொடுப்பதற்காக தற்போதைய ஜனாதிபதி, இளைஞர் சேவைகள் அமைச்சர் என்ற ரீதியில், அன்று பல பணிகளை முன்னெடுத்தார்.
பாடசாலை காலத்துக்குப் பிறகு பல்கலைக்கழகம் செல்லாத இளைஞர்களை வழிநடத்துவதில் இளைஞர் சேவைகள் மன்றம் பெரும் பங்கு வகிக்கிறது என்பது தெளிவாகிறது. அதற்காக இளைஞர் படையணி பாரிய பொறுப்பை ஆற்றுவதை நாம் அறிவோம்.
நாட்டுக்கு, இளைஞர் படையணி ஆற்றி வரும் மிகப்பெரிய பங்களிப்பு இளைஞர்களின் ஒற்றுமையாகும். எதிர்காலத்தில் நாட்டைக் கட்டியெழுப்பும் சவாலுக்கு இளைஞர் படையணி போன்ற அமைப்புகள் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்ய முடியும். இளைஞர்களின் திறமைக்கு உதவும் வகையில் அனைத்து வசதிகளையும் இளைஞர் படையணி கொண்டுள்ளது. நமது இளைஞர்களின் திறன்களை வளர்த்து, எதிர்காலத்தை பொறுப்பேற்கக்கூடிய குடிமக்களை உருவாக்க இது உதவுகிறது.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க கருத்துத் தெரிவிக்கையில்,
நானும் சன்ன குணதிலக்கவும் இந்தப் பணியை ஆரம்பித்தபோது எங்களுக்கு தேசிய இளைஞர் படையணியொன்று இருக்கவில்லை.
இன்றைய ஜனாதிபதி மற்றும் அன்றைய நமது பிரதமரின் எண்ணக்கருவை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பதே முதன்மையான பொறுப்பாகும்.
சிறந்த ஆளுமை மிக்க, காலத்திற்கு ஏற்ற திறமையுள்ள, நல்ல தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய, எதிர்கால சவால்களை வெற்றிகொள்ளும் திறன் கொண்ட, தொழிற் சந்தைக்கு தயாரான, பொருத்தமான மனப்பாங்குள்ள இளம் தலைமுறையை உருவாக்குவதே அதன் அடிப்படைத் தேவையாக இருந்தது.
இதுவரை, இந்த வேலைத்திட்டம் சுமார் 20 ஆண்டுகளுக்குள் முன்னேற்றம் கண்டுள்ளது. இன்னும் அரசியல் மயப்படாமல் செயற்பட்டுக் கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நமது நாட்டிற்கு மிக முக்கியமான விடயம் இளைஞர்களின் எதிர்காலம் ஆகும். இன்று விருதுபெற்ற அனைத்து இளைஞர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், அவர்களைப் பயிற்றுவிப்பதற்கும், நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட மற்றும் அதற்கு தலைமை வகித்த அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு மேடையேற்றப்பட்ட கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் மிகச் சிறப்பாக அமைந்திருந்தன. ஏனைய நிகழ்ச்சிகளின் சிறப்பை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. ஏனென்றால் ஏனைய பணிகளைச் செய்துகொண்டேதான் கலை நிகழ்ச்சிகளுக்கு பயிற்சி பெறுவதாக தலைவர் எனக்குத் தெரிவித்தார்.
தேசிய இளைஞர் சேவை மன்றம் இதற்கு மாறுபட்டது. கலைத் துறைக்குச் சென்றால் கலைப் பயிற்சி மட்டுமே பெறுகின்றனர். வேறொரு தொழிலுக்குத் தயாராகும் அதே சந்தர்ப்பத்திலேயே இங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளுக்கும் பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர்.
இருப்பினும், நாம் இன்னும் நவீனமயப்பட வேண்டும். உலகை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும். கைத்தொழில் புரட்சியின் மூன்றாவது கட்டத்தில் இருந்து நான்காவது கட்டத்திற்கு நாடு பயணிக்கிறது. தகவல் தொழில்நுட்பத்திலிருந்து செயற்கை அறிவுக்கு நகர்கிறது. மேலும் நாம் ஒரு முழுமையான டிஜிட்டல் உலகிற்குள் நுழைகிறோம். அதற்கும் நாம் தயாராக வேண்டும்.
இப்போது இருப்பவை அனைத்தும் இழக்கப்படும் என்பது அதற்கு அர்த்தமல்ல. ஆனால் புதிய விடயங்களை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும். சில துறைகளில் வேலைவாய்ப்புகளை இழக்க நேரிடும். அதேபோன்று ஏனைய துறைகளில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். அந்த தொழில்கள் நாம் பழகிய தொழில்களை விட உயர்ந்த நிலையில் இருக்கலாம். மேலும் இதனுடன் எதிர்கொள்ள வேண்டிய அபாயங்களும் உள்ளன.
இன்றைய இளைஞர் சமுதாயத்திற்கு கையடக்கத் தொலைபேசிக்கும் அப்பால் ஒரு வாழ்க்கை இருப்பதாக தெரியவில்லை. அதில் ஆபத்து உள்ளது. அதில் சிக்காமல் அப்புரட்சியிலிருந்து மீள்வது எப்படி? நாம் எதிர்காலத்திற்க்கு எவ்வாறு தயாராக வேண்டும்.? அதேபோன்று இந்நாட்டை உலகிலேயே முன்னணி நாடு என்ற நிலைக்கு கொண்டு வருவது எப்படி? இளைஞர் படையணி அதற்கு மிகப் பொறுத்தமான இடமாகும்.
உலகம் காலநிலை மாற்றத்தினால் பாதித்துவரும் நிலையில் இலங்கையும் இதன் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளதை நான் இதற்கு முன்னர் தலைவருக்கு சுட்டிக்காட்டினேன். இந்தப் பாதிப்புக்களைக் குறைக்க இளைஞர் படையணி இதுகுறித்து அளப்பரிய பங்களிப்பைச் செய்ய முடியும். அதேபோல், உலகத்தில் இளைஞர்கள் ஒன்றிணைந்துள்ள சந்தர்ப்பத்தில், நாட்டிற்காக இவ்வாறான பணிகளை முன்னெடுக்கும் பொறுப்பு இளைஞர்களுக்கு இருக்கிறது.
இளைஞர் படையணிக்கும் இந்தப் பொறுப்பு இருக்கிறது. இதுகுறித்து கவனம் செலுத்துமாறு தலைவர் உட்பட நிர்வாகக் குழுவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன். எதிர்காலத்தை எதிர்கொள்வதற்காக தயாராகுமாறு இளைஞர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.
நாம் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கிறோம். எனினும், இந்த நிலையை வெற்றிகொள்வதற்குத் தேவையான வேலைத்திட்டங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் நடைமுறைப்படுத்தி வருகிறார். தேர்தலிலில் போட்டியிட்டு பதவிக்கு வந்த ஜனாதிபதியைவிட இவருக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. அதேபோல், அவருக்கு திறமையும் இருக்கிறது. இளைஞர்களுக்கும் மக்களுக்கும் தான் அவர் பொறுப்புகூற வேண்டியுள்ளது. இந்தப் பொறுப்பை ஜனாதிபதி சரியாக நிறைவேற்றி வருகிறார்.
வாக்காளர்களை மகிழ்ச்சிப்படுத்த ஜனாதிபதி பணியாற்றவில்லை. எதிர்கால சந்ததிக்கும், நாட்டு மக்களுக்கும், நாட்டிற்கும் அவர் பொறுப்பு கூறுகிறார். இந்தப் பொறுப்பை அவர் நிறைவேற்றி வருகிறார். பொருளாதார கட்டமைப்பு சரியாக உருவாகி வருகிறது. இதனால் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படும் நாடு உருவாகும். முதலீட்டாளர் ஒருவர் வந்தால், வெளிப்படைத்தன்மையுடன் அந்த முதலீட்டை மேற்கொண்டு, இந்நாட்டின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்க முடியும். அதேபோல், நாட்டிற்கு அந்நியச் செலாவணியைப் பெற முடியும்.
இதுதான் எமக்குத் தேவையாக இருக்கிறது. எமது நாட்டிற்கு அந்நியச் செலாவணி கிடைக்கும் அளவிற்கு எமக்கு வருமானம் கிடைக்கும். வருமானம் கிடைக்கும் போது நாட்டில் அபிவிருத்தி ஏற்படும். இந்த எதிர்காலத்தை உருவாக்க ஜனாதிபதி பணியாற்றி வருகிறார். உங்களுக்கு மிகச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க ஜனாதிபதி அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறார். இதில் நம்பிக்கை வையுங்கள். இந்தப் பயணத்தில் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்.
விளையாட்டு, இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹன திசாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான மதுர விதானகே, கபில நுவன் அத்துகோரள, தேசிய இளைஞர் படையணியின் தலைவர் கேர்ணல் தர்ஷன ரத்னநாயக்க உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.