வருசநாடு: கடமலை-மயிலை ஒன்றியத்தில் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை , குமணந்தொழு, மூலக்கடை, முத்தாலம்பாறை, வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் 100 ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு உற்பத்தியாகும் தேங்காய் காங்கேயம், திருச்சி பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக கடமலை-மயிலை ஒன்றியத்தில் தேங்காய் உற்பத்தி அதிக அளவில் காணப்படுகிறது.
உற்பத்தி அதிகரித்துள்ள காரணத்தால் தேங்காய் விலை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 15 ரூபாய்க்கு விற்பனையான தேங்காய் தற்போது ரூ.12 முதல் ரூ.13 வரை மட்டுமே விற்பனைகிறது. விலை குறைவுக்கு உற்பத்தி அதிகரிப்பு மட்டுமல்லாமல், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தேங்காய் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுவதும் காரணம் என தேங்காய் வியாபாரிகள் தெரிவித்தனர்.
போதுமான விலை இல்லாத போது விவசாயிகள் தேங்காய்களை உடைந்து அதனை வெயிலில் காயவைத்து எண்ணெய் தயாரிப்பிற்காக ஏற்றுமதி செய்வது வழக்கம். ஆனால் தற்போது கொப்பரை தேங்காயின் விலையும் மிகவும் குறைந்தே காணப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் கடமலை-மயிலை ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் விவசாய நிலங்களில் மற்றும் குடோன்களில் தேங்காய்கள் தேக்கமடைந்து காணப்படுகிறது.
எனவே தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வெளிமாநிலங்களில் இருந்து தேங்காய்கள் இறக்குமதியை கட்டுபடுத்த வேண்டும். மேலும் தற்போது பாதிப்படைந்துள்ள தென்னை விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.