வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் விற்பனையின்றி தேங்கி கிடக்கும் பன்னீர்கரும்புகள்: வியாபாரிகள் கவலை

வேலூர்: வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் பொங்கல் பண்டிக்கைக்கு கொண்டுவரப்பட்ட பன்னீர்கரும்புகள் விற்பனையின்றி தேங்கி கிடப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கடந்த 15ம்தேதி கொண்டாடப்பட்டது. இப்பண்டிகையின்போது கரும்பு, வாழைப்பழம், மஞ்சள்கொத்து, மண்பானை மற்றும் பூ போன்றவற்றை படையல் வைத்து வழிபாடு செய்வது வழக்கம். இதற்காக கரும்பு, மஞ்சள் உள்ளிட்டவற்றை விவசாயிகள் அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்பி வைப்பார்கள். கடந்தாண்டு பெய்த மழையினால் கரும்பு, வாழை, மஞ்சள் கொத்து ஆகியவற்றின் விளைச்சலும் அதிகரித்து இருந்தது. குறிப்பாக தென்மாவட்டங்களில் பன்னீர் கரும்பு வகைகள் அதிக பரப்பில் விவசாயிகள் பயிர் செய்து உள்ளனர்.

இந்தாண்டு உற்பத்தியும் அதிகளவில் இருப்பதால் மார்க்கெட்டில் கரும்பு வரத்து அதிகரித்து இருந்து. இதனால் வேலூர் நேதாஜி மார்க்கெட்டிற்கு மட்டும் 50க்கும் மேற்பட்ட லாரிகளில் பன்னீர்கரும்பு வெளியூர்களில் இருந்து கொண்டு வரப்பட்டது. இருப்பினும் எதிர்பார்த்த அளவு விற்பனை இல்லாததால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து வேலூர் கரும்பு வியாபாரிகள் கூறியதாவது: ஆண்டுதோறும் பொங்கல் பண்டியைொட்டி வேலூர் மார்க்கெட்டிற்கு கடலூர், சீர்காழி, பூம்புகார், சிதம்பரம், சேலம், பண்ருட்டி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலிருந்து வரும் கரும்பை வாங்கி விற்போம்.

இந்த ஆண்டு 15 முதல் 20 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ₹400 முதல் ₹500 வரை முதலில் விற்பனை  செய்யப்பட்டது. பின்னர் படிப்படியாக விலை குறைந்தது. எப்போதும் கரும்பு விற்பனை களைக்கட்டும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக விற்பனை பாதித்தது. இந்த ஆண்டு விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் பொங்கல் பண்டிக்கைக்கு கரும்பு குறைந்து அளவு மட்டுமே விற்பனையானது.

இதனால் வியாபாரிகள் நஷ்டம் அடைந்து உள்ளனர். தற்போது குளிர் மற்றும் பனியும் அதிகளவில் இருப்பதால் பலருக்கும் காய்ச்சல் பாதிப்பு உள்ளது. கரும்பு சாப்பிடுவதை தவிர்த்துள்ளனர். தேங்கி கிடக்கும் கரும்புகளை வாங்கிய விலையை விட பாதி விலைக்கு வியாபாரம் செய்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.